பாசன வாய்க்கால்களை அடைத்து தரைப்பாலம் அமைப்பதை தடுக்க வேண்டும்
நாகை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை பணிக்காக பாசன வாய்க்கால்களை அடைத்து தரைப்பாலம் அமைப்பதை தடுத்து நிறுத்தி கான்கிரீட் பாலம் கட்டித்தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை பணிக்காக பாசன வாய்க்கால்களை அடைத்து தரைப்பாலம் அமைப்பதை தடுத்து நிறுத்தி கான்கிரீட் பாலம் கட்டித்தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை
நாகையில் இருந்து திருவாரூர் வழியாக தஞ்சாவூர் வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிக்காக நாகை மாவட்டத்தில் விளைநிலங்கள் உள்ளிட்டவைகள் கையகப்படுத்தப்பட்டு பணிகள் நடந்து வந்தது.
சிக்கல் அருகே தேமங்கலம் ஊராட்சி மூன்றாம் வாய்க்காங்கரை பகுதியில் கார் வாய்க்கால், குற்றம் பொருத்தானிருப்பு வாய்க்கால், பரங்கிநல்லூர் வாய்க்கால் ஆகிய வாய்க்கால்கள் குறுக்கே நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
விளைநிலங்கள் பாசன வசதி
இந்த வாய்க்கால்கள் மூலம் சுமார் 2000 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும் இந்த 3 வாய்க்கால்களும் புலியூர், ராமன்மடம், தேமங்கலம் ஆகிய பகுதிகளின் வடிகால் வாய்க்காலாகவும் செயல்பட்டு வருகிறது
நாகை- தஞ்சை தேசியநெடுஞ்சாலை அமைக்கும் பணியின்போது நீர்நிலைகள் எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்று அரசு தெரிவித்துள்ளது. அதை மீறி சிக்கல் அருகே மூன்றாம் வாய்க்காங்கரை பகுதியில் வாய்க்கால்களின் குறுக்கே சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருவதாக அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.இதனால் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கும் அபாயம் உருவாகி உள்ளது.
சோழர்கால வாய்க்கால்கள்
கார் வாய்க்கால், குற்றம் பொருத்தானிருப்பு வாய்க்கால், பரங்கிநல்லூர் வாய்க்கால் ஆகிய வாய்க்கால்களுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத படி, தனித்தனியாக பாக்ஸ் அமைப்பிலான கான்கிரீட் பாலம் அமைத்து, சாலை போட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து நாகை கடைமடை விவசாய சங்கத்தலைவர் தமிழ்செல்வன் கூறுகையில், தேமங்கலம் ஊராட்சி மூன்றாம் வாய்க்காங்கரை பகுதியில், கார் வாய்க்கால், குற்றம்பொருத்தானிருப்பு வாய்க்கால், பரங்கிநல்லூர் வாய்க்கால் ஆகிய மூன்று வாய்க்கால்கள் சோழர்கள் காலத்தில் இருந்து பாசன வாய்க்கால்களாக செயல்பட்டு வருகிறது.
மழை காலங்களில் பாதிப்பு ஏற்படும்
இந்த வாய்க்கால்கள் மூலம் 2000 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த முக்கியமான பாசன வாய்க்கால்களுக்கு குறுக்கே நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.இதில் குறிப்பாக கார் வாய்க்கால் முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளது. இதை அறிந்து விவசாயிகள், பணிகளை தடுத்து தற்காலிகமாக நிறுத்தினோம்.
மழை காலங்களில் கூடுதல் தண்ணீர் வந்தால் பனமேடு, சங்கமங்கலம், தெற்குவெளி, சிக்கல், குற்றம்பொருத்தானிருப்பு, ஐவநல்லூர் ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும். எனவே சாலை அமைக்கும் பணியை நாங்கள் ஒருபோதும் தடுக்கவில்லை. அதே நேரத்தில் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்றார்.
கான்கிரீட் பாலம் கட்ட வேண்டும்
இதுகுறித்து விவசாயி குமார் கூறுகையில் நெடுஞ்சாலை சாலை அமைப்பதற்காக சிக்கல் அருகே வாய்க்கால்களையும் இணைத்து தரைப்பாலம் அமைக்க முடிவு செய்துள்ளனர். தரைபாலம் அமைத்தால் தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்படும்.
கனரக வாகனங்கள் பாலத்தை கடந்து செல்லும்போது குழாய் உடைந்து விடும். இதனால் முறையாக தண்ணீர் செல்லாது. பல்வேறு விளைநிலங்களுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்படும். எனவே 3 வாய்க்கால்களிலும் தனித்தனியாக கான்கிரீட் பாலம் அமைத்து சாலை போட வேண்டும் என்றார்.