ஊரக வேலை, கழிவறை கட்டும் திட்டங்களில் முறைகேடு

சோழபாண்டியபுரம் ஊராட்சியில் ஊரக வேலை, கழிவறை கட்டும் திட்டங்களில் முறைகேடு கல்லூரி மாணவர்கள், வெளியூர்களில் வசிப்பவர்களின் பெயர்கள் இருப்பதாக புகார்;

Update:2023-01-09 00:15 IST

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள சோழபாண்டியபுரம் ஊராட்சியில் பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் எழுந்தது. இது குறித்து மாவட்ட கலெக்டர் ஷ்ரன்குமார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு ஊராட்சி செயலாளர் மற்றும் ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட 4 பேரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். அத்துடன் ஊராட்சியின் வரவு-செலவு கணக்குகளை முறையாக பராமரிக்கவில்லை என ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகியோருக்கு விளக்க கடிதம் அனுப்பிய கலெக்டர் முறைகேடு நடைபெற்ற காலகட்டத்தில் பணியாற்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சோழபாண்டியபுரம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம் மற்றும் கழிப்பறை கட்டும் திட்டம் ஆகிய 2 திட்டங்களிலும் முறைகேடுகள் நடந்து இருப்பதாக புகார் எழுந்துள்ளது. அதாவது ஊரக வேலை உறுதி திட்டத்தில் கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் மற்றும் வெளியூர்களில் தங்கி வேலை பார்த்து வரும் நபா்களின் பெயரில் அடையாள அட்டை பதிவு செய்து அதன் மூலம் பண மோசடி நடைபெற்று இருப்பதாகவும், அதேபோல் ஊராட்சி பதிவேட்டில் உள்ள எண்ணிக்கையின் படி கழிவறைகள் கட்டப்படாமலேயே கட்டி முடித்து இருப்பதாக முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த ஊராட்சியில் கடந்த 20 வருடங்களாக நடைபெற்ற வரவு-செலவு கணக்குகளை முற்றிலும் மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்