ஐ.பி.எல்.கிரிக்கெட்: டிக்கெட்டை காட்டி சென்னை மாநகர பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம்
அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை முதல் கிரிக்கெட் மைதானம் வரை சிறிய பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
சென்னை,
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை காணவரும் பார்வையாளர்கள், போட்டிக்கான நுழைவுச் சீட்டை காண்பித்து மாநகர பஸ்களில் பயணம் செய்யலாம் என்று மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் 2024-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும், பொது போக்குவரத்து பயன்பாட்டினை அதிகரிக்கும் விதமாகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவனத்திடம் மாநகர போக்குவரத்து கழகம் உரிய பயண கட்டணம் பெற்றுள்ளது.
அதன் அடிப்படையில், பயணிகள் கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச் சீட்டு வைத்திருந்தால் அதை நடத்துனரிடம் காண்பித்து பஸ்களில் (குளிர்சாதன பஸ் நீங்கலாக) போட்டி நடைபெறும் நேரத்திற்கு 3 மணி நேரத்துக்கு முன்பும், போட்டி முடிந்த பின்னர் 3 மணி நேரத்துக்கும் பஸ்களில் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.
சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து பார்வையாளர்கள் மாநகர பஸ்களில் கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச் சீட்டை காண்பித்து வரலாம். அடையாறு, மந்தைவெளி, கோட்டூர்புரம், திருவான்மியூர், ஈஞ்சம்பாக்கம், கோவளம், கண்ணகிநகர், பெரும்பாக்கம், சோழிங்கநல்லூர், கேளம்பாக்கம், திருப்போரூர் செல்லும் பஸ்கள் அண்ணா சதுக்கத்தில் இருந்து புறப்படும்.
சென்னை பல்கலைக்கழக பஸ் நிறுத்தத்தில் இருந்து பாரிமுனை கார்னர், கடற்கரை ஸ்டேசன், ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், மணலி, எண்ணூர், மீஞ்சூர், வள்ளலார் நகர், மூலக்கடை, செங்குன்றம் மற்றும் காரனோடை செல்லும் பஸ்கள் புறப்படும்.
அண்ணா சாலை ஓமந்தூரார் ஆஸ்பத்திரி அருகில் இருந்து, ராயப்பேட்டை, மந்தைவெளி, நந்தனம், தியாகராயநகர், சைதாப்பேட்டை வேளச்சேரி, மடிப்பாக்கம், கீழ்கட்டளை, பள்ளிக்கரணை, மேடவாக்கம், கலைஞர் நகர், கிண்டி, விமான நிலையம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம். கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி, வள்ளுவர் கோட்டம், வடபழனி. போரூர், குன்றத்தூர், அய்யப்பன்தாங்கல், பூந்தமல்லி, எழும்பூர், அமைந்தகரை, கோயம்பேடு, பெரம்பூர், நுங்கம்பாக்கம், அண்ணாநகர், முகப்பேர் மேற்கு, முகப்பேர் கிழக்கு, அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், அயனாவரம், வில்லிவாக்கம் ஆகிய இடங்களுக்கு செல்லும் பஸ்கள் புறப்படும்.
அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை முதல் கிரிக்கெட் மைதானம் வரை சிறிய பஸ்கள் இயக்கப்பட உள்ளது. எனவே, பார்வையாளர் இந்த பஸ் இயக்கத்தினை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.