தர்மபுரி அருகே திறந்தவெளி கிடங்கில் இருப்பு வைக்கப்பட்ட 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயம்?அதிகாரிகள் தீவிர விசாரணை
தர்மபுரி:
தர்மபுரி அருகே திறந்தவெளி கிடங்கில் இருப்பு வைக்கப்பட்ட 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயமானதா? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திறந்தவெளி நெல் கிடங்கு
தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே திறந்தவெளி நெல் கிடங்கு செயல்பட்டு வருகிறது. தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் சரக்கு ரெயில் மூலம் தர்மபுரிக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு திறந்தவெளி நெல் கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகின்றன.
அங்கு இருப்பு வைக்கப்பட்டு தேவைக்கு ஏற்ப தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நெல் அரவை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கு அரவை செய்யப்பட்ட பின்னர் அரிசி மூட்டைகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படுகின்றன. அங்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி வினியோகிக்கப்படுகிறது.
இருப்பு குறைவதாக புகார்
இந்த நிலையில் அதியமான்கோட்டை அருகே உள்ள நெல் கிடங்கிற்கு கடந்த சில மாதங்களில் 22 ஆயிரம் டன் நெல் கொண்டு வரப்பட்டதாகவும், அதில் 7 ஆயிரம் டன் இருப்பு குறைவதாகவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக துறை சார்ந்த கண்காணிப்பு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தர்மபுரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள் கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில் 80-க்கும் மேற்பட்ட நெல் அரவை ஆலைகள் உள்ளன. அதியமான்கோட்டை அருகே உள்ள திறந்தவெளி நெல் கிடங்கிற்கு கொண்டு வரப்பட்டு நெல் மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக இருப்பு வைக்கப்பட்டுள்ள நெல்லை அளவீடு செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. முதல் கட்டமாக 7 ஆயிரம் டன் நெல் அரவைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை முழுமையாக அரவைக்கு அனுப்பும் போது இருப்பு குறைந்துள்ளதா? என்பது தெரிய வரும். அப்படி இருப்பு குறைந்திருப்பது உறுதி செய்யப்பட்டால் உரிய விசாரணை நடத்தப்படும். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.