துப்பாக்கிகள் தயாரித்த வழக்கு: சேலத்தில் 2-வது நாளாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை

துப்பாக்கிகள் தயாரித்த வழக்கு தொடர்பாக சேலத்தில் 2-வது நாளாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Update: 2022-08-05 19:28 GMT

துப்பாக்கி தயாரிப்பு

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே புளியம்பட்டி பகுதியில் கடந்த மே மாதம் போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது செவ்வாய்பேட்டையை சேர்ந்த என்ஜினீயர் சஞ்சய் பிரகாஷ், எருமாபாளையம் பகுதியை சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி ஆகியோரிடம் இருந்து 2 கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதில் நண்பர்களான அவர்கள் ஏற்காடு அடிவாரம் கருங்காலி என்ற இடத்தில் வீடு வாடகைக்கு எடுத்து துப்பாக்கிகள் தயாரித்தது தெரியவந்தது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக சேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்த கபிலர் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை சேலம் கியூ பிரிவு போலீசாரும் விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு (தேசிய புலனாய்வு முகமை) மாற்றப்பட்டது.

2-வது நாளாக விசாரணை

இதையடுத்து என்.ஐ.ஏ. இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் அதிகாரிகள் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து சேலம் வந்தனர். பின்னர் அவர்கள் ஓமலூர் போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். அங்கு வழக்கு தொடர்பான ஆவணங்களை வாங்கி பார்த்ததுடன், கைதான சஞ்சய் பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தி, கபிலர் ஆகியோரிடம் விசாரித்த போலீசாரிடம் தகவல்களை கேட்டறிந்தனர்.

இந்தநிலையில் நேற்று சேலம் கன்னங்குறிச்சியில் உள்ள கியூ பிரிவு போலீஸ் நிலையத்துக்கு சென்ற என்.ஐ.ஏ. அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை நடத்தினர். மேலும் அவர்கள் வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்று கொண்டனர். அந்த ஆவணங்களின் அடிப்படையிலும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும் விரைவில் கைதானவர்களை கோர்ட்டு மூலம் காவலில் எடுத்து விசாரணை நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்