மீனவர்களுக்கு வாக்கி-டாக்கி வழங்கும் திட்ட முறைகேடு புகார்களை விசாரிக்க வேண்டும்-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மீனவர்களுக்கு வாக்கி-டாக்கி வழங்கும் திட்ட முறைகேடு புகார்களை விசாரிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மீனவர்களுக்கு வாக்கி-டாக்கி வழங்கும் திட்ட முறைகேடு புகார்களை விசாரிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
வாக்கி-டாக்கி
மதுரை மேலமடையைச் சேர்ந்த மோகன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச்செல்லும்போது எல்லை தாண்டினால் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை தடுக்கும் வகையில் அவர்களுக்கு வாக்கி-டாக்கி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. கடந்த 2008-ம் ஆண்டு இதுதொடர்பாக தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இந்த திட்டத்திற்காக நிதி ஒதுக்கப்பட்டு, 3,100 வாக்கி-டாக்கிகள் வாங்குவதற்கு தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட கடலோர எல்லைப்பகுதிகளில் 3 தகவல் தொடர்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டு, இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
அதன்பின் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. சுமார் ரூ.37 கோடி அளவில் முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையை முடிக்கும்படி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
விசாரிக்க வேண்டும்
இந்த மனு நீதிபதி முரளிசங்கர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் வக்கீல் வி.ரமேஷ் ஆஜராகி, மீனவர்களுக்கான வாக்கி-டாக்கி திட்டத்தை செயல்படுத்தியதில் பல கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த புகார் மீதான விசாரணை மந்தமாக உள்ளது என வாதாடினார்.
அப்போது லஞ்சம் மற்றும் ஊழல் துறை சார்பில் மனுதாரர் புகாரைப்போல இதே குற்றச்சாட்டு குறித்து பல்வேறு புகார் மனுக்கள் பெறப்பட்டு உள்ளன. அவற்றின் மீதான விசாரணை நடக்கிறது என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதி, இதுதொடர்பாக பெறப்பட்டுள்ள புகார்கள் அனைத்தையும் சேர்த்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று கூறி, இந்த வழக்கு விசாரணையை வருகிற 6-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்