ஓய்வூதியதாரர்களுக்கு உயிர்வாழ் சான்று வழங்கும் திட்டம் அறிமுகம்
தபால்காரர் மூலம் வீடு தேடி சென்று ஓய்வூதியதாரர்களுக்கு உயிர்வாழ் சான்று வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக மேற்கு மண்டல அதிகாரி தெரிவித்தார்.
ஊட்டி
தபால்காரர் மூலம் வீடு தேடி சென்று ஓய்வூதியதாரர்களுக்கு உயிர்வாழ் சான்று வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக மேற்கு மண்டல அதிகாரி தெரிவித்தார்.
தேசிய மாநாடு
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தபால் துறை ஆய்வாளர்கள், உதவி கண்காணிப்பாளர்கள் சங்க 42-வது தேசிய மாநாடு நடைபெற்றது. இதற்கு தலைவர் பாபு தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் பிதாபாஷா ஜெனா வரவேற்றார். மாநாட்டில் மேற்கு மண்டல போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் சுமிதா அயோதியா கலந்துகொண்டு சிறப்பு தபால் உறையை வெளியிட்டார். தொடர்ந்து அவர் பேசும்போது கூறியதாவது:-
தபால்துறை ஊழியர்கள் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில் பணியாற்றி வருகின்றனர். தபால்துறையின் முதுகெலும்பாக ஊழியர்கள் அர்பணிப்புடன் பணியாற்றுகின்றனர்.
ஒரு துறை நூற்றாண்டுகளுக்கு மேல் இயங்கி வருவது பெருமைக்குரியது. தபால்துறையின் நோக்கம் சேவை. நாட்டின் கடைகோடி பகுதிகளுக்கும் இந்த துறையின் சேவை சென்றடைந்துள்ளது.
நடமாடும் வங்கி
தபால்துறையினர் பன்முகதன்மை கொண்டவர்கள். தபால்துறையில் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். போட்டிகள் நிறைந்த சூழலில், களத்தில் இருக்க ஊழியர்களின் திறன்களை மேம்படுத்த வேண்டும்.
தபால்துறையில் வங்கி சேவை அறிமுகப்படுத்தப்பட்டு, நடமாடும் ஏ.டி.எம். சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அனைத்து தபால்காரரும் நடமாடும் வங்கி போல செயலாற்றி வருகின்றனர்.
கொரோனா காலகட்டத்தில் தபால்துறை மட்டுமே மக்கள் சேவையாற்றியது. மருந்து முதல் அத்தியாவசிய பொருட்கள் வரை மக்களிடம் கொண்டு சேர்த்தது. புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் உதவியது.
உயிர்வாழ் சான்று
தற்போது தமிழக அரசுடன் ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு தபால்காரர் மூலம் வீடு தேடி வரும் டிஜிட்டல் உயிர் வாழ் சான்று வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநாட்டில் ரூப் சந்த், அரூப் சீல், கமல் பாஷா மற்றும் 20 மாநிலங்களை சேர்ந்த 193 நிர்வாகிகள் பங்கேற்றனர். முடிவில் பொருளாளர் எஸ்.கவிதா நன்றி கூறினார்.