பேராசிரியர் உள்பட 3 பேரிடம் விசாரணை

மருத்துவ மாணவி தற்கொலை விவகாரத்தில் பேராசிரியர் உள்பட 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

Update: 2023-10-07 21:50 GMT

நாகர்கோவில்:

மருத்துவ மாணவி தற்கொலை விவகாரத்தில் பேராசிரியர் உள்பட 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

மருத்துவ மாணவி தற்கொலை

தூத்துக்குடி வி.டி.சி. நகரைச் சேர்ந்தவர் சிவகுமார். வியாபாரியான இவருடைய மனைவி இந்திராதேவி. இவர்களுடைய மகள் சுகிர்தா (வயது 27). இவர் சென்னையில் உள்ள ஒரு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முடித்ததும், 2 வருடம் டாக்டராக பணியாற்றினார். பின்னர் முதுநிலை மருத்துவம் படிக்க குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தார்.

அங்கு 2-ம் ஆண்டு அவர் படித்து வந்தார். இதற்காக கல்லூரி விடுதியில் தங்கியபடி தினமும் கல்லூரிக்கு சென்று வந்தார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் கல்லூரிக்கு செல்லாத சுகிர்தா விடுதி அறையில் இறந்த நிலையில் கிடந்தார்.

உடலில் தசையை தளர்வடைய செய்யும் மருந்தை ஊசி மூலம் சுகிர்தா செலுத்திக் கொண்டு தற்கொலை செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளியானது. பின்னர் குலசேகரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

3 பேரிடம் விசாரணை

மேலும் விடுதி அறையில் இருந்த சுகிர்தாவின் மடிக்கணினி, செல்போன் போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர். அதே சமயத்தில் சுகிர்தா எழுதி வைத்திருந்த கடிதமும் போலீசாரிடம் சிக்கியது.

அந்த கடிதத்தில் கல்லூரி பேராசிரியர், முதுநிலை 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர் மற்றும் ஒரு மாணவியை பற்றி எழுதியதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து 3 பேரிடம் தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு மதியழகன் நேற்று துருவி, துருவி விசாரணை நடத்தினார்.

உடல் ஒப்படைப்பு

இதற்கிடையே நேற்று ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சுகிர்தாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு தந்தை சிவகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மகளின் உடலை பார்த்து அவர் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

மேலும் இதுதொடர்பாக சிவகுமார் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், தன்னுடைய மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்