இடைக்கால பட்ஜெட்: விவசாயிகளின் நலனுக்கான சிறப்பு திட்டங்கள் இடம்பெறாதது ஏமாற்றமளிக்கிறது - டிடிவி தினகரன்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனி நபர் வருமான வரிக்கான உச்சவரம்பு உயர்த்தப்படாமல் இருப்பது ஏமாற்றமளிக்கிறது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

Update: 2024-02-01 16:18 GMT

சென்னை,

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

சீர்திருத்தம், செயலாக்கம், மாற்றம் என்பதை தாரகமாக கொண்டு இன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் பெண்களின் உயர்கல்வி 28 சதவிகிதம் அதிகரிப்பு, பெண் தொழில் முனைவோருக்கு முத்ரா திட்டத்தின் கீழ் 30 கோடி கடன் என பெண்களின் நலன் சார்ந்த திட்டங்களுக்கும், பெண்களின் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளித்திருப்பது மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தருகிறது.

கர்ப்பப்பை புற்றுநோய் தடுப்பூசி, ஊட்டச்சத்து குறைபாடுகளை சரி செய்ய புதிய செயலி, நாடு முழுவதும் புதிய மருத்துவக் கல்லூரிகளை உருவாக்க குழு அமைக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் நாட்டின் சுகாதாரத்துறையை மேலும் வலுப்படுத்தும் வகையில் இருந்தாலும், அடிக்கல் நாட்டப்பட்டு பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருக்கும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிதி, கட்டுமானப்பணிகள் குறித்த எந்த அறிவிப்பும் இடம்பெறாதது தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

உதான் திட்டத்தின் கீழ் சிறு நகரங்களுக்கு விமான சேவை தொடங்க 1,000 விமானங்கள் கொள்முதல், வந்தே பாரத் ரெயில்களின் சேவை அதிகரிப்பு, முக்கியத்துவம் வாய்ந்த 3 புதிய ரெயில் பெருவெளி தடங்கள், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க கூடுதல் பேட்டரி சார்ஜ் நிலையங்கள் என போக்குவரத்து வளர்ச்சி தொடர்பான அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது.

4 கோடி விவசாயிகளுக்கு வேளாண் காப்பீடு, விவசாய துறையில் அதிக முதலீடு, சூரிய ஒளி மேற்கூரை அமைக்கும் வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட விவசாய நலன் சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டிருந்தாலும், விவசாயிகளின் ஊக்கத்தொகை இரட்டிப்பு, உர மானியம், விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயம், கடன் தள்ளுபடி, நதிநீர் இணைப்பு குறித்த அறிவிப்புகள் இடம்பெறாதது அவர்களை மிகுந்த கவலையடையச் செய்திருக்கிறது.

வரி செலுத்துவோரின் எண்ணிக்கை உயர்ந்திருக்கும் நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனி நபர் வருமான வரிக்கான உச்சவரம்பு உயர்த்தப்படாமல் இருப்பது ஏமாற்றமளிக்கிறது.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்