காவிரி கூட்டுக் குடிநீர் குழாய்களை வலுப்படுத்தும் பணி தீவிரம்

வேலூரில் பாலாற்றின் நடுவே செல்லும் காவிரி கூட்டுக் குடிநீர் குழாய்களை வலுப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2022-05-20 14:10 GMT

வேலூர்

வேலூரில் பாலாற்றின் நடுவே செல்லும் காவிரி கூட்டுக் குடிநீர் குழாய்களை வலுப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பாலாற்றில் வெள்ளம்

வேலூர் மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பெய்த கனமழையால் பாலாற்றின் கரையோரம் உள்ள வீடுகள், பாலாற்றில் உள்ள தரைப்பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இந்த மழையால் பாலாற்றில் பல வாரங்களாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் காவிரி கூட்டுக் குடிநீர் குழாய்கள் பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் வேலூர் மாநகராட்சிக்கு குடிநீர் தடைபட்டது. இதனால் உள்ளூர் குடிநீர் ஆதாரங்கள் மூலம் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டது. தற்போது அசானி புயல் காரணமாக வேலூர் மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றின் ஒருபகுதியில் அதிகளவில் தண்ணீர் பாய்ந்தோடுகிறது.

குழாய்கள் சேதம்

வேலூர் மாநகராட்சி பகுதிகளுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படும் குழாய் பாலாற்றின் நடுவே செல்கிறது. மழை வெள்ளத்தால் மீண்டும் அந்த குழாயில் சில நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது. அதை அதிகாரிகள் சரிசெய்தனர். வெள்ளம் ஓடும் பகுதியில் உள்ள குழாய் எளிதில் வெள்ளத்தில் அடித்துச் செல்ல வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே குழாயை பாதுகாக்கும் வகையில் பெரிய அளவிலான கற்களை குழாய்களின் இருபுறமும் அடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக 2 பொக்லைன் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், குழாயில் தண்ணீர் செல்லும்போது வெள்ளத்தை தாக்குபிடிக்கும் வகையில் வலுவாக உள்ளது. குழாயில் தண்ணீர் வினியோகம் இல்லாத நேரத்தில் குழாய் வலுவற்றதாக மாறிவிடுகிறது. இதனால் மழைவெள்ளம் குழாயை சேதப்படுத்தி விடுகிறது. இதை தடுக்க குழாயை வலுப்படுத்தும் விதமாக தற்காலிகமாக அரண்போல் பெரிய கற்களை வைத்து வருகிறோம். இதேபோல பல்வேறு இடங்களில் குழாயை பலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் சிமெண்டு கான்கிரீட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்