இன்சூரன்ஸ் அதிகாரியின் ஸ்கூட்டர் மீது மோதி 5 பவுன் சங்கிலி, செல்போன் பறிப்பு

சிதம்பரம் அருகே மோட்டாா் சைக்கிளில் சென்று ஓய்வுபெற்ற இன்சூரன்ஸ் அதிகாரியின் ஸ்கூட்டர் மீது மோதி 5 பவுன் சங்கிலி மற்றும் செல்போனை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-11 18:47 GMT

அண்ணாமலைநகர்

இன்சூரன்ஸ் அதிகாரி

சிதம்பரம் அம்மாபேட்டை முத்துக்குமரன் நகரை சேர்ந்தவர் மோகன்முத்து(63). ஓய்வு பெற்ற இன்சூரன்ஸ் அதிகாரியான இவர் சம்பவத்தன்று இரவு ஸ்கூட்டரில் சிதம்பரம் அம்மாபேட்டை புறவழிச்சாலை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் திடீரென ஸ்கூட்டர் மீது மோதினார். இதில் நிலை தடுமாறி ஸ்கூட்டரில் இருந்து மோகன்முத்து தவறி விழுந்தார். அப்போது அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலி மற்றும் சட்டைப்பையில் இருந்த செல்போன் ஆகியவற்றை மர்ம நபர் பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச்சென்றார்.

வாலிபர் கைது

பின்னர் இது குறித்து மோகன் முத்து அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா். மேலும் மர்ம நபரை பிடிக்க சிதம்பரம் உட்கோட்ட குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசாா் தீவிர விசாரணை நடத்தி மோகன்முத்துவிடம் தங்க சங்கிலி மற்றும் செல்போனை பறித்துச்சென்ற சிதம்பரம் அருகே உள்ள வீரசோழகன் துணிசிரமேடு இந்திரா நகரை சேர்ந்த வீரஜோதி(28) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து செல்போன் மற்றும் 5 பவுன் சங்கிலியை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்