குளங்கள் சீரமைப்பு பணிகள் அதிகாரி ஆய்வு
பட்டிவீரன்பட்டி அருகே குளங்கள் சீரமைப்பு பணிகளை அதிகாரி ஆய்வு செய்தார்.
பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவுவில் புளியங்குளமும், போடிகாமன்வாடியில் வாடிகுளமும் உள்ளது. இந்த குளங்களின் மூலம் சுமார் 400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. ஆனால் இந்த குளங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாமல் புதர்மண்டி கிடக்கின்றன. அதேபோல் குளங்களில் தண்ணீர் வெளியேறும் மடைகள் சேதமடைந்து காணப்பட்டன. இதனால் குளங்களில் போதிய அளவு தண்ணீர் தேக்க முடியாத நிலை இருந்தது.
இதைத்தொடர்ந்து குளங்களை தூர்வாருவதுடன், மடைகள் மற்றும் வரத்துக்கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில் மத்திய-மாநில அரசுகளின் புனரமைத்தல், சீரமைத்தல், நவீனப்படுத்துதல் திட்டத்தின்கீழ் புளியங்குளம் மற்றும் வாடிக்குளத்தில் வரத்துக்கால்வாய்களை தூர்வாருதல், புதிதாக மடைகள் கட்டுதல் மற்றும் கரைகளை பலப்படுத்துதல் பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது.
இந்தநிலையில் குளங்கள் சீரமைப்பு பணிகளை நீர்வளத்துறையின் மஞ்சளாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் சுகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர் செல்வம், மருதாநதி அணை உதவி பொறியாளர் கண்ணன், நிலக்கோட்டை பாசன பிரிவு உதவி பொறியாளர் பரதன் ஆகியோர் உடனிருந்தனர். இந்த பணிகளை தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக முடிக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.