பாலக்கோடு பகுதியில் அதிகாரிகள் திடீர் ஆய்வு: உரக்கடையில் விற்பனைக்கு தடை

Update: 2023-03-11 18:45 GMT

பாலக்கோடு:

பாலக்கோடு பகுதியில் ஆய்வு செய்த வேளாண் அதிகாரிகள் ஒரு உரக்கடையில் விற்பனைக்கு தடை விதித்தனர்.

உரக்கடைகளில் ஆய்வு

தர்மபுரி மாவட்ட வேளாண் தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் தாம்சன் தலைமையில் வட்டார பூச்சிக்கொல்லி ஆய்வாளர் மணிவண்ணன் உள்ளிட்டோர் அடங்கிய அதிகாரிகள் குழுவினர் பாலக்கோடு வட்டாரத்தில் உள்ள தனியார் உரக்கடைகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் திடீர் ஆய்வு நடத்தினர்.

அப்போது அரசு நிர்ணயித்த விலையில் உரங்கள் விற்பனை செய்யப்படுகிறதா?, விற்பனை முனைய கருவி உர இருப்பு, பதிவேடு உர இருப்பு, கிடங்கிலுள்ள உண்மை உர இருப்பு ஆகியவை சரியாக உள்ளதா?, உர இருப்பு மற்றும் விலை விவர பலகை விவசாயிகளின் பார்வைக்கு தெரியும்படி வைத்து பராமரிக்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்தனர்.

விற்பனைக்கு தடை

இதேபோல் விற்பனை முனைய கருவி மூலம் உரங்கள் விற்பனை செய்யப்படுகிறதா?, உரம் வாங்கும் விவசாயிகளுக்கு ரசீது சரியாக வழங்கப்படுகிறதா? என்பது குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின்போது உரக்கட்டுப்பாட்டு சட்டத்தை மீறி செயல்பட்ட ஒரு உரக்கடையில், உரங்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதேபோல் சில உரக்கடைகளில் அரசால் தற்காலிகமாக தடைசெய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் கண்டறியப்பட்டன. அவற்றை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்