உலர்களங்கள் கட்டுமான பணிகளை கலெக்டர் ஆய்வு
பர்கூர் தாலுகாவில் உலர்களங்கள், கசிவுநீர் குட்டைகள் கட்டுமான பணிகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேரில் ஆய்வு செய்தார்.
பர்கூர் தாலுகாவில் உலர்களங்கள், கசிவுநீர் குட்டைகள் கட்டுமான பணிகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேரில் ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
பர்கூர் தாலுகா தொகரப்பள்ளி, பட்லப்பள்ளி, குமாரம்பட்டி, நாகம்பட்டி ஆகிய கிராமங்களில் செயல்படுத்தி உள்ள உலர்களங்கள், கசிவுநீர் குட்டைகள் ரூ.13 லட்சத்து 99 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்படுகிறது. இந்த கட்டுமான பணிகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பிறகு கலெக்டர் கூறியதாவது:-
தமிழக அரசு மழைநீர் சேகரிப்பு பணிகளுக்காக பல்வேறு துறைகளின் சார்பில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில், பர்கூர், வேப்பனப்பள்ளி, தளி வட்டாரங்களில் ரூ.6 கோடியே 28 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு உள்ளது. இதையடுத்து நுழைவுகட்ட பணிகள், இயற்கை வள மேம்பாட்டு பணிகள், வேளாண் உற்பத்தி திட்டப்பணிகள், சுழல்நிதி வழங்கும் பணிகள் மற்றும் பயிற்சிகள் ஆகியன மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நடவடிக்கை
இதில், தொகரப்பள்ளி, பட்லப்பள்ளி, கன்னண்டஅள்ளி, நாகம்பட்டி பகுதிகளில் உலர்களங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும் குமாரம்பட்டியில் கசிவுநீர் குட்டை அமைக்கும் பணி முடிவு பெற்றுள்ளது. அதேபோல பட்லப்பள்ளியில் கசிவுநீர் குட்டை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கன்னண்டஅள்ளி ஊராட்சி பெத்தான்ஏரியில் மதகுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடவேண்டும்.
மேலும், பர்கூர், வேப்பனப்பள்ளி, தளி ஆகிய 3 ஒன்றியங்களில் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட நீர்வடிப்பகுதி வேளாண்மை துணை இயக்குனர் ஜெகதீசன், வேளாண்மை உதவி இயக்குனர் சகாயராணி, உதவிப்பொறியாளர் பத்மாவதி மற்றும் நீர்வடிப்பகுதி உறுப்பினர்கள் பிரபு, இனியன் ஆகியோர் உடனிருந்தனர்.