கலைஞர் மகளிர் உரிமைத்தொகை:பயனாளிகளுக்கு முகாம்கள் அமைத்து விண்ணப்பங்கள் வழங்க நடவடிக்கைகலெக்டர் சாந்தி நேரில் ஆய்வு

Update: 2023-07-16 19:30 GMT

தர்மபுரி:

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு முகாம்கள் அமைத்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த முகாம் நடைபெறும் இடங்களை கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை

தமிழ்நாடு அரசு சார்பில் வருகிற செப்டம்பர் மாதம் 15-தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரசின் வழிகாட்டுதலின் படி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்குவதற்கு தர்மபுரி மாவட்டம் முழுவதும் வருகிற 20-ந் தேதி சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி இலக்கியம்பட்டி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, பென்னாகரம் ரோடு திருவள்ளுவர் அறிவகம் அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தர்மபுரி எஸ். வி. ரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்களை அனைத்து சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அந்த பள்ளிகளில் அடிப்படை வசதிகள் முறையாக உள்ளதா? என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் கலெக்டர் சாந்தி கேட்டறிந்தார்.

பயனாளிகள் தேர்வு

அப்போது கலெக்டர் கூறுகையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் எனும் சிறப்புமிக்கத் திட்டத்தினை அறிவித்துள்ளார். இந்த திட்டத்தை தர்மபுரி மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை சிறப்பாக மேற்கொள்ள மாவட்ட அளவில் மேற்பார்வை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் பயனாளிகளை தேர்வு செய்யும் பொருட்டு அரசின் வழிகாட்டுதல் படி துறை சார்ந்த அலுவலர்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

தர்மபுரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டதிற்கான விண்ணப்பங்கள் வினியோகம் முறையாக மேற்கொள்ள வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை தகுதி உள்ள அனைத்து பயனாளிகளுக்கும் கிடைக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக மாவட்டம் முழுவதும் விண்ணப்பங்கள் வழங்குவதற்கான முகாம்கள் வருகிற 20-ந் தேதி நடைபெற உள்ளது.

உறுதியேற்க வேண்டும்

இந்த திட்டத்தில் எந்த வித குளறுபடியும் இல்லாமல் சிறப்பாக மேற்கொள்ள அலுவலர்கள் உறுதியேற்க வேண்டும். குறிப்பாக இதற்கான விண்ணப்பங்கள் விநியோகம் செய்யும்போது கூட்ட நெரிசல் ஏற்படாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் பழனி தேவி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஜெயக்குமார், நகராட்சி ஆணையாளர் அண்ணாமலை, சுகாதார அலுவலர் ராஜரத்தினம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்