"விசாரணைக் கைதி ராஜசேகர் மரணத்திற்கு காயம் காரணமில்லை" - உடற்கூராய்வு அறிக்கையில் தகவல்

காவல்துறையினரிடம் ராஜசேகர் சிக்குவதற்கு முன்பாக அவருக்கு காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Update: 2022-06-15 09:59 GMT

சென்னை,

கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட அப்பு என்ற ராஜசேகர் (வயது 31) உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காவலர்கள் 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.

இந்த நிலையில் ராஜசேகரின் உடற்கூராய்வு அறிக்கையை விரைவில் வழங்கவும் காவல் ஆணையருக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. அதன்படி இன்று ராஜசேகரின் உடற்கூராய்வு முடிந்து அதன் முதற்கட்ட மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது.

அதில் ராஜசேகரின் உடலில் கால்களில் சிறிய காயங்கள், கைகளில் ரத்தக்கட்டு, காலின் பின்புறத்தில் சதைப்பகுதியில் ரத்தக்கட்டு, தொடைப்பகுதியில் காயங்கள் உள்ளிட்டவை இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல் காயம் ஏற்பட்டு எவ்வளவு மணி நேரம் ஆகியது என்பது குறித்த அளவுகோல்களும் கூறப்பட்டுள்ளன.

அதன்படி ராஜசேகர் உயிரிழப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாகவே ரத்த காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும், ஒரு சில காயங்கள் 18 முதல் 20 மணி நேரத்திற்கு முன்பாக ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினர் ராஜசேகரை காலையில் கைது செய்த நிலையில், மாலையில் அவர் உயிரிழந்துள்ளார். எனவே சுமார் 9 முதல் 10 மணி நேரம் வரை மட்டுமே அவர் காவல்துறையினரின் பிடியில் இருந்துள்ளார். எனவே காவல்துறையினரிடம் ராஜசேகர் சிக்குவதற்கு முன்பாக இந்த காயங்கள் அவருக்கு ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் தற்போது இந்த விவகாரம் பார்க்கப்படுகிறது.

அதே போல திசுக்கள் தொடர்பான ஆய்வுகள், வேதியல் தொடர்பான ஆய்வுகளின் முடிவுகளுக்கு காத்திருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே காவல்துறை தரப்பில் ராஜசேகர் சித்திரவதை செய்யப்படவில்லை என கூறப்பட்டு வரும் நிலையில், அதனை உறுதிப்படுத்தும் விதமாக உடற்கூராய்வின் முதற்கட்ட அறிக்கை வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்