மாயனூர் அரசு மாதிரி பள்ளியில் உள்கட்டமைப்பு பணிகள் தீவிரம்

மாயனூர் அரசு மாதிரி பள்ளியில் உள்கட்டமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2023-08-21 17:54 GMT

 கரூர் மாயனூரில் அமைந்துள்ள அரசு மாதிரி பள்ளியில் பல்வேறு உட்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் ஏற்கனவே 26 மாவட்டங்களில் அரசு மாதிரி பள்ளிகள் நடைபெற்று வருகிறது. நடப்பு கல்வி ஆண்டு முதல் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மாதிரி பள்ளிகள் இயங்கும் என்று அரசு அறிவித்ததன் அடிப்படையில் வருகின்ற கல்வியாண்டு முதல் கரூர் மாவட்டத்தில் அரசு மாதிரி பள்ளி இயங்க உள்ளது. இந்த பள்ளி 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியில் நடைபெற உள்ளது.

இப்பள்ளியில் 400 மாணவர்களும், 400 மாணவிகளும் தங்கும் விடுதி வசதியுடன் செயல்பட உள்ளது. இப்பள்ளியில் 19 முதுகலை ஆசிரியர்களும், 10 பட்டதாரி ஆசிரியர்களும் பணிபுரிந்து பாடங்களை நடத்த உள்ளனர். அனைத்து வகுப்புகளும் ஸ்மார்ட் வகுப்பறைகளாக அமைக்கப்பட உள்ளது. இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பாட புத்தகங்களை தவிர உயர்கல்வி படிப்பதற்கான போட்டி தேர்வுகள் எழுதுவதற்கு பயிற்சி அளிக்கப்படும்.

குறிப்பாக எந்தவித கட்டணமும் இல்லாமல் தமிழக அரசு இப்பள்ளியை நடத்த உள்ளது. கிட்டத்தட்ட ரூ.2 ¾ கோடி அளவிற்கு செலவுகள் செய்து ஆய்வகங்கள், விடுதிகள் மற்றும் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், விடுதிக்காப்பாளர்கள் அங்கேயே தங்கி பணி செய்ய உள்ளனர். எனவே அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு இப்பள்ளி வழிகாட்டுதலாகவும், முன்னுதாரணமாகவும் இருக்கும், என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்