செந்தில் பாலாஜிக்கு மேலும் 20 நாட்கள் சிகிச்சை: காவேரி மருத்துவமனை தரப்பில் தகவல்
அமைச்சர் செந்தில் பாலாஜி தாமாக உணவு எடுத்துக் கொள்வதாக காவேரி மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இருதயத்தில் 4 அடைப்புகள் இருந்ததால் கடந்த 21-ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதையடுத்து அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், இதயத்தில் அடைப்புகள் அகற்றப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி அவசர சிகிச்சை பிரிவில் இருந்து தனி அறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், அறுவை சிகிச்சைக்கு பின் அமைச்சர் செந்தில் பாலாஜி குழாய் வழியாக உணவு எடுத்துவந்த நிலையில், இன்று அவரே உணவு எடுத்துக்கொள்வதாக காவேரி மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் மேலும் 20 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாகவும் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை மருத்துவமனை கண்காணிப்பில் இருப்பார் எனவும் அறுவை சிகிச்சைக்கு பிறகு அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நடைப்பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. நீதிமன்றம் அல்லது புழல் சிறை அனுமதி பெற்று செந்தில் பாலாஜியை குடும்பத்தினர் சந்திக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை காவேரி மருத்துவமனையின் 4வது மாடியில் உள்ள தனி வார்டில் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடந்த 21ஆம் தேதி செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில், இதுவரை யாரும் அவரை சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.