காட்சி பொருட்களான தகவல் பலகைகள்

காட்சி பொருட்களான தகவல் பலகைகள்

Update: 2023-08-13 19:30 GMT

கோவை

கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்கள் புனரமைப்பு, பல அடுக்கு வாகன நிறுத்துமிடம், மாதிரி சாலைகள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ரூ.24 கோடி செலவில் ஆர்.எஸ்.புரம் டி.பி. ரோடு மாதிரி சாலையாக மாற்றப்பட்டது. 1.80 கி.மீ. தூரம் கொண்ட இந்த சாலையின் இருபுறமும் 2 மீட்டர் அகலத்திற்கு நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது.

இது தவிர பொதுமக்கள் ஓய்வெடுக்க கிரானைட் கற்களால் ஆன இருக்கைகள் போடப்பட்டு உள்ளன. மேலும் ஆர்.எஸ்.புரத்தின் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலையில் 8 அடி உயரம் 16 அடி அகலத்துடன் பாலிகார்ப்பரேட் பொருட்கள் மூலமாக 'தேவதையின் இறக்கை' வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமானோர் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.

இந்த சாலையின் இருபுறமும் 50 இடங்களில் தகவல் பலகைகள் மூலம் திருக்குறள் மற்றும் சுதந்திரத்திற்காக போராடிய கோவையை சேர்ந்த தலைவர்ககளின் வரலாறு குறிப்பிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த மாதிரி சாலை திறக்கப்பட்டு 2 ஆண்டுகளை கடந்து விட்டது. ஆனால் ஒரு சில தலைவர்களின் வரலாறு மட்டுமே இங்குள்ள தகவல் பலகைகளில் இடம்பெற்றுள்ளது. மீதம் உள்ள தகவல் பலகைகள் தலைவர்களின் வரலாறு இன்றி வெறும் காட்சி பொருளாக காட்சியளிக்கிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

கோவையின் முதல் மாதிரி சாலையாக டி.பி. ரோடு உள்ளது. இன்றைய இளம் தலைமுறையினர் கோவையை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ளும் வகையில் 50 இடங்களில் தகவல் பலகைகள் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் சில இடங்களில் மட்டுமே ஒரு சில தலைவர்களின் வரலாறுகள் வைக்கப்பட்டு உள்ளன. மீதம் உள்ள பலகைகள் வெறும் காட்சி பொருளாக காட்சி அளிக்கிறது. எனவே அனைத்து தகவல் பலகைகளிலும் தலைவர்களின் வரலாறு, திருக்குறள் இடம்பெறுவதை மாநகராட்சி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Tags:    

மேலும் செய்திகள்