காரைக்குடியில் ரூ.48½ கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் நகராட்சி கூட்டத்தில் தலைவர் முத்துத்துரை தகவல்
காரைக்குடியில் ரூ.48½ கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற உள்ளதாக நகராட்சி கூட்டத்தில் தலைவர் முத்துத்துரை தெரிவித்தார்.
காரைக்குடி
காரைக்குடியில் ரூ.48½ கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற உள்ளதாக நகராட்சி கூட்டத்தில் தலைவர் முத்துத்துரை தெரிவித்தார்.
நகராட்சி கூட்டம்
காரைக்குடி நகர் மன்ற கூட்டம் அதன் தலைவர் முத்துத்துரை தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் குணசேகரன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் வீர.குமார், என்ஜினீயர் கோவிந்தராஜன், மற்றும் உறுப்பினர்கள், அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-
குணசேகரன் துணைத்தலைவர்:-தேவஸ்தான இடங்களில் வீடு கட்டி வசிப்போருக்கு நகராட்சி வரி விதிப்பு செய்ய வேண்டும் அதன் மூலம் நகராட்சியின் வருவாயை உயர்த்துவதோடு ஏழை எளியோரின் நலன் காக்க வேண்டும்.
தலைவர் முத்துத்துரை; தேவஸ்தானத்திடமிருந்து தடையில்லா சான்று பெற்று வந்தால் மட்டுமே வரி விதிப்பு செய்ய முடியும், இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்வோம்..
பிரகாஷ்:- காரைக்குடி நகரையே தூய்மைப்படுத்தும் தூய்மை காவலர்கள் வசிக்கும் முனிசிபல் காலனி பகுதியில் குடிநீர் பிரச்சினை நிலவுகிறது. அதனை தீர்க்க உடனடி நடவடிக்கை வேண்டும்.
மதுக்கடையை அகற்ற வேண்டும்
மெய்யர்; வ.உ.சி. சாலையில் உள்ள அரசு மதுபானக்கடையை அகற்ற கோரி பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளோம். அதிகாரிகளும் அக்கடையினை வேறு இடத்திற்கு மாற்றுவதாக உறுதியளித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன, எந்த நடவடிக்கையும் இல்லை. அந்த மதுக்கடையினை இன்னும் ஒரு மாதகாலத்திற்குள் மாவட்ட நிர்வாகம் அகற்றாவிட்டால் எனது நகர்மன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து அக் கடிதத்தை தமிழக முதல்வருக்கு அனுப்புவேன்.
.சொ.கண்ணன்; பல்கலைக்கழக சாலைக்கு வள்ளல் அழகப்பர் சாலை என்றும், நூறடி சாலைக்கு கலைஞர் சாலை என்றும், செக்காலை வீதிக்கு அண்ணா சாலை என்று பெயர் மாற்றம் செய்திட மன்றத்தின் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
தனம்;பாதாள சாக்கடைத்திட்டத்தில் இணைப்புக்கொடுக்க ஒப்பந்ததாரர்கள் அதிகளவில் பணம் கேட்கின்றனர்.
ரூ.48 கோடியில்பணிகள்
நகர் மன்ற தலைவர் முத்துத்துரை;- உறுப்பினர்களின் கோரிக்கை குறித்து கவனமுடன் பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.சென்ற ஓராண்டில் மட்டும் திட்ட ஒதுக்கீடுகளுக்கான நிதி ரூ.24 கோடியே 24 லட்சம், பொது நிதியிலிருந்து ரூ.8 கோடியே 32 லட்சத்து 52 ஆயிரம், கல்வி நிதியிலிருந்து ரூ.2 கோடியே 26 லட்சம் என மொத்தம் ரூ.34 கோடியே 82 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்றுள்ளன.
தற்போது கழனிவாசல்-வாட்டர் டேங்க் சாலையில் அமைந்துள்ள வாரச்சந்தையில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் புதிய கடைகள் அமைக்கப்பட்டு தினசரி சந்தையாக மாற்றப்பட உள்ளது. ரூ.6 கோடி மதிப்பீட்டில். பழைய பஸ்நிலையத்தில் புதிய வணிக வளாகங்கள் கட்டப்பட்டு தேவையான வசதிகளுடன் மேம்படுத்தப்பட உள்ளது.
மேலும் கணேசபுரத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத்தோட்டி, கழனிவாசல் பகுதியில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி அமைக்கவும், காரைக்குடி நகராட்சி பகுதியில் தேவையான இடங்களில் பிரதான நீர் உந்து குழாய்கள் மற்றும் பகிர்மான குழாய்கள் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கவும் திட்டமிடப்பட்டு அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் ரூ. 48 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சித்திட்ட பணிகள் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளன.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.