கலைத்திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற4 மாணவ, மாணவிகளுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு முதன்மை கல்வி அலுவலர் தகவல்

கலைத்திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற 4 மாணவ, மாணவிகள் வெளிநாடு செல்ல உள்ளதாக முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்

Update: 2023-04-10 18:45 GMT

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;-

சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட அளவில் நடைபெற்ற கலைத்திருவிழா மற்றும் மன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவ,மாணவிகள் சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் வெளிநாடுகளுக்கு விமானத்தில் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று அரசு அறிவித்து இருந்தது.

சென்னையில் நடைபெற்ற இந்த போட்டிகளில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 4 மாணவ-மாணவிகள் வெற்றி பெற்று முதல் இடத்தை பெற்றனர். இதில் வெற்றியோர் அரசு மேல்நிலைப்பள்ளி 7-ம் வகுப்பு மாணவன் குகன் வினாடி வினா போட்டியிலும், சாலை கிராமம் அரசு மேல்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு மாணவி துர்கா தேவி மற்றும் காரைக்குடி நகராட்சி உயர்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு மாணவி ஷண்முக ஷிவானி ஆகியோர் இலக்கிய மன்ற போட்டியிலும், கொண்டபாளையம் ஊராட்சி ஒன்றிய பள்ளியின் 8-ம் வகுப்பு மாணவர் சின்னையா ஆகியோர் கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்று வெளிநாடு செல்லும் வாய்ப்பை பெற்றனர்.

இவ்வாறு அதில் அவர் கூறினார். வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் மற்றும் பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்