ஓராண்டில் ரூ.46 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் நகர்மன்ற கூட்டத்தில் தலைவர் தகவல்

காரைக்குடியில் ஓராண்டில் ரூ.46 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நகர்மன்ற கூட்டத்தில் தலைவர் முத்துதுரை கூறினார்.

Update: 2023-03-15 18:45 GMT

காரைக்குடி, 

காரைக்குடியில் ஓராண்டில் ரூ.46 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நகர்மன்ற கூட்டத்தில் தலைவர் முத்துதுரை கூறினார்.

வளர்ச்சி பணிகள்

காரைக்குடி நகர்மன்ற கூட்டம் அதன் தலைவர் முத்துத்துரை தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் குணசேகரன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் லெட்சுமணன் மற்றும் அதிகாரிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:- தலைவர் முத்துத்துரை:- இந்நகர்மன்றத்தில் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைகிறது. ஓராண்டில் ரூ.34 கோடியே 94 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சில பணிகள் நடைபெற்று வருகின்றன. அரசு நிதி ஒதுக்கீடு கிடைக்க பரிந்துரை செய்த அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனுக்கு மன்றத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் நகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.9 கோடி, கல்வி நிதியிலிருந்து ரூ.2 கோடி அளவிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. குடிநீர் வசதியினை மேம்படுத்த அரசு ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

ஆணையாளர் லெட்சுமணன்:- ரஸ்தா பகுதியில் தேவகோட்டை நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் நீண்ட காலமாக கொட்டப்பட்டு வந்தன. இதற்கு அப்பகுதி மக்கள் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக புகார் அளித்ததை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று கலெக்டர் தேவகோட்டை - சருகணி சாலையில் தேவகோட்டை நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு இடம் ஒதுக்கீடு செய்து கொடுத்துள்ளார்.

வரி பாக்கி

பசும்பொன் மனோகரன்:- அருணா நகர்பகுதியில் செயல்பட்டு வந்த தாய்சேய் நல மையம் இடிக்கப்பட்டு நீண்ட நாளாகிவிட்டது. புதிய கட்டிடம் அறிவிப்பு என்ன ஆனது? தலைவர் முத்துத்துரை:- காரைக்குடி நகருக்கு நகர்ப்புற சுகாதார மையங்கள் 6 அனுமதிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 2 மையங்களின் பணிகள் நிறைவுற்றது. மற்ற மையங்களுக்கான பணிகள் அடுத்தடுத்து தொடங்கப்படும்.

கலா:- எனது பகுதியில் உள்ள ஆபத்தான மின் கம்பங்களை மாற்ற தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். பிரகாஷ்:- பழைய அரசு மருத்துவமனை அப்பகுதி மக்களின் நலன் கருதி தொடர்ந்து இயங்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் உறுதி அளித்திருந்தார் ஆனால் இரவோடு இரவாக அரசு மருத்துவமனையை சிறிது சிறிதாக காலி செய்து வருகின்றனர். இதில் நகர்மன்றம் தலையிட்டு அமைச்சர் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மெய்யர்; நகராட்சிக்கு வரவேண்டிய தொழில்வரி, சொத்து வரி, காலியிட வரி நீண்ட காலமாக வசூலிக்க முடியாமல் நிலுவையிலிருந்த ரூ.84 லட்சம் வரை தள்ளுபடி செய்யப்படுவது வருத்தத்திற்குரியது. வருங்காலங்களிலாவது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் வரி வசூலினை இலக்கு வைத்து வசூல் செய்து நகராட்சிக்கு இழப்பு ஏற்படாமல் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு கூட்டம் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்