தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வுக்கு வாய்ப்பு

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் முதல் 10 சதவீதம் கட்டண உயர்வு செய்யப்படும் என கூறப்படுகிறது.

Update: 2023-03-09 18:45 GMT

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் முதல் 10 சதவீதம் கட்டண உயர்வு செய்யப்படும் என கூறப்படுகிறது.

சுங்கச்சாவடி

தேசிய நெடுஞ்சாலைகளில் நெடுஞ்சாலை அமைக்கப்பட்டதில் இருந்து அமைப்பு செலவு மற்றும் பராமரிப்பு செலவை ஈடுகட்டுவதற்காக சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும் நடைமுறை அமலுக்கு வந்தது. அந்த வகையில் 45 கிலோ மீட்டர் முதல் 50 கிலோமீட்டர் இடைவெளியில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த வசூலிப்பு பணி டெண்டர் மூலம் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தொடக்க காலத்தில் இந்த நடைமுறை அமலுக்கு வந்த போது தேசிய நெடுஞ்சாலை அமைப்பு செலவினை ஈடு கட்டிய பின்பு இந்த நடைமுறை கைவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் தற்போது பராமரிப்பு செலவை காரணம் காட்டி தொடர்ந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கட்டண உயர்வு

இந்நிலையில் வரும் ஏப்ரல் முதல் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கட்டண உயர்வு செய்யப்படும் என கூறப்படுகிறது. இலகுரக வாகனங்களுக்கு 5 சதவீதமும், கனரக வாகனங்களுக்கு 10 சதவீதமும் உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் சில குறிப்பிட்ட மாநிலங்களில் எக்ஸ்பிரஸ் சாலைகளில் வசூலிக்கப்படும் கட்டணமும் உயர்த்தப்படுமென கூறப்படுகிறது. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆய்வு செய்து அறிக்கை தயாரித்து வருவதாகவும், இம்மாதம் 25-ந் தேதி நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும், அதன் பின்னர் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

தற்போது நடைமுறையில் உள்ள பாஸ்ட் ட்ராக் முறையில் உயர்வு செய்யப்படும் கட்டணம் அட்டையில் கழிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. கடந்த 2022-ல் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி கட்டணமாக ரூ.33 ஆயிரத்து 881 கோடி வசூலானது. இது முந்தைய 2021-ம் ஆண்டை விட 21 சதவீதம் அதிகம். கடந்த 2018-2019-ம் நிதியாண்டை விட 32 சதவீதம் அதிகம் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே மத்திய மந்திரி நிதின்கட்காரி அறிவித்தபடி சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று கோரப்படும் நிலையில் கட்டண உயர்வை மத்திய அரசு கைவிட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்