வாழைத்தோட்டம், நடுமலை ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைந்தது

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையாததால் வாழைத்தோட்டம், நடுமலை ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைந்துவிட்டது. மேலும் சோலையாறில் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

Update: 2023-08-24 20:45 GMT

வால்பாறை

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையாததால் வாழைத்தோட்டம், நடுமலை ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைந்துவிட்டது. மேலும் சோலையாறில் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

தென்மேற்கு பருவமழை

வால்பாறை பகுதியில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்யும். இந்த ஆண்டு உரிய நேரத்தில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து சில நாட்கள் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பி.ஏ.பி. திட்டத்தின் முக்கிய அணையான சோலையாறு, நீராறு, சின்னக்கல்லாறு ஆகிய அணைகளுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டது.

தொடர்ந்து சோலையாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியதும், 2 மின் நிலையங்களும் இயக்கப்பட்டு, மின் உற்பத்திக்கு பிறகு பரம்பிக்குளம் அணைக்கும், கேரளாவிற்கும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

மின் உற்பத்தி

அதன்பிறகு தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யவில்லை. இதனால் சோலையாறு அணைக்கு 295 கன அடி தண்ணீர் மட்டுமே வந்து ெகாண்டு இருக்கிறது. ஆனால் 1485 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

அதில் உள்ள தண்ணீரும் அடுத்த 3 வாரங்களுக்கு மட்டுமே மின் உற்பத்தி செய்ய போதுமானதாக இருக்கும். இதே சூழல் நீடித்தால், போதிய தண்ணீர் இன்றி மின் உற்பத்தி பாதிக்கப்படும். தற்போது சோலையாறு அணை நீர்மட்டம் 126 அடியாக உள்ளது. இதே நாளில் கடந்த ஆண்டு முழு கொள்ளளவை எட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

கால்நடைகள் நடமாட்டம்

இதற்கிடையில் தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாததால், வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் வரத்து குறைந்துவிட்டது. குறிப்பாக இந்த மாதம் வழக்கமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடக்கூடிய வாழைத்தோட்டம் ஆறு, நடுமலை ஆறு ஆகிய ஆறுகளில் தண்ணீர் வரத்து அடியோடு குறைந்து விட்டது. இதனால் அந்த ஆறுகளில் கால்நடைகள் இறங்கி நடமாடி வருகிறது.

இதன் காரணமாக பாசனத்துக்கும், குடிநீருக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தால் மட்டுமே இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்பதால், அனைத்து தரப்பினரும் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்