சாண பரிசோதனை செய்து ஆடுகளில் குடற்புழுவை நீக்க வேண்டும்-ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்

சாண பரிசோதனை செய்து ஆடுகளில் உருளை புழுக்களின் தாக்கம் அதிகமாக இருந்தால் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும் என ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தி உள்ளது.

Update: 2022-07-26 12:41 GMT

நாமக்கல்:

மழைக்கு வாய்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அடுத்த 3 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று 8 மி.மீட்டரும், நாளை (வியாழன்) 6 மி.மீட்டரும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) 28 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காற்று மணிக்கு 6 மற்றும் 5 கி.மீ. வேகத்தில் மேற்கு திசையில் இருந்து வீசும்.

வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 93.2 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 71.6 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 80 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 40 சதவீதமாகவும் இருக்கும்.

குடற்புழு நீக்கம்

பொதுவாக மழைக்காலங்களில் மேய்ச்சல் நிலங்களில் இளநிலை பருவ புழுக்கள் அதிக எண்ணிக்கையில் காணப்படுகிறது. எனவே செம்மறி மற்றும் வெள்ளாடுகளில் உருளை புழுக்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதனால் ஆடுகளுக்கு சாண பரிசோதனை செய்து உருளை புழுக்களின் தாக்கம் அதிகமாக இருந்தால் குடற்புழு நீக்கம் செய்யலாம்.

மேலும் சமீபகாலமாக பெய்து வரும் பருவமழையின் காரணமாக வயல், வரப்புகள் மற்றும் தரிசு நிலங்களில் பல்வேறு வகையான புற்கள் வளர்ந்து காணப்படுகின்றன. இவற்றை கால்நடைகள் உட்கொள்வதால், வயிற்றில் உள்ள நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகரித்து, செரிமான கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

சிகிச்சை

அவ்வாறு பாதிக்கப்பட்ட கால்நடைகள், தீவனம் உட்கொள்ளாமல், சோர்வடைந்து வயிறு உப்புசமாக காணப்படும். இந்த பாதிப்பு கண்ட கால்நடைகளுக்கு முறையான தீவன மேலாண்மை உத்திகளை கையாள்வதன் மூலம் எளிதாக குணப்படுத்தலாம். தீவிரமாக பாதித்த கால்நடைகளுக்கு மருத்துவரை அணுகி முறையான சிகிச்சை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்