தாய்ப்பால் குடித்து விட்டு தூங்கிய பச்சிளம் குழந்தை சாவு
தாய்ப்பால் குடித்து விட்டு தூங்கிய பச்சிளம் குழந்தை பரிதாபமாக இறந்தது.
கரூர் மாவட்டம், குளித்தலை கிரி தெருவை சேர்ந்தவர் தினேஷ்குமார். இவரது மனைவி பவித்ரா (வயது 27). இ்ந்த தம்பதிக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பிறந்து 29 நாட்களான இவர்களது 3-வது பெண் குழந்தையான மானஷ்வினிக்கு, பவித்ரா தாய்ப்பால் கொடுத்துவிட்டு தூங்கியுள்ளார்.
பின்னர் நேற்று காலை எழுந்து பார்த்த போது அந்த குழந்தை எந்த ஒரு அசைவும் இன்றி உடம்பு குளிர்ந்த நிலையில் இருந்துள்ளது. இதையடுத்து குழந்தையை அவரது பெற்றோர் உடனடியாக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பவித்ரா கொடுத்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.