மாணவிகள், இளம் பெண்கள் மாயமாகும் நிலை அதிகரிப்பு

மாவட்டத்தில் மாணவிகள், இளம் பெண்கள் மாயமாகும் நிலை அதிகரித்து வருவது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2023-02-24 19:55 GMT


மாவட்டத்தில் மாணவிகள், இளம் பெண்கள் மாயமாகும் நிலை அதிகரித்து வருவது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதிகரிப்பு

சமீபகாலமாக விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் இளம் பெண்கள், அதிலும் குறிப்பாக பட்டாசு, தீப்பெட்டி ஆலைகளில் பணியாற்றும் இளம் பெண்கள் மாயமாகும் நிலை அதிகரித்து வருகிறது.

இதுபற்றி தொடர்புடையவர்கள் போலீஸ்நிலையங்களில் புகார் செய்தாலும் போலீசாரின் கவனத்திற்கு வராமல் மாயமாகும் பெண்களும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூர், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரேநாளில் 10 பெண்கள் மாயமாகியுள்ளனர். இதில் 13 மற்றும் 17 வயது பள்ளி மாணவிகள் உள்பட 10 பேர் மாயமாகி உள்ளனர். இதில் ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணும் உள்ளார்.

வாய்ப்பு

கொரோனா பாதிப்பு காலத்தில் பள்ளி கல்வி நிறுவனங்களில் ஆன்லைன் கற்றல்முறை அமலுக்கு வந்தபோது நகர் மற்றும் கிராமத்தில் பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகளுக்கு செல்போன் வாங்கிக் கொடுத்ததை தொடர்ந்து அவர்களுக்கு கற்றல் பணியை விட பிற தொடர்புகள் அதிகரித்துவிட்டது.

இதனை தொடர்ந்து மாயமாகும் நிலையும் தேவையற்ற பிரச்சினைகளும் அதிகரித்து வருகிறது. சில நிகழ்வுகளில் பள்ளி, கல்லூரி மாணவிகள் தொடர்புடைய இளைஞர்களுடன் மாயமாகிவிடும் நிலையில் பெற்றோரை தொடர்பு கொண்டு தாங்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் தேட வேண்டாம் என தகவல் தெரிவிக்கும் நிலையும் உள்ளது.

விழிப்புணர்வு

ஆனாலும் பெற்றோர் மனம் கேட்காத நிலையில் போலீசாரிடம் புகார் செய்யும் நிலை தொடர்கிறது. போலீஸ்நிர்வாகம் மாவட்டம் முழுவதும் கல்வி நிறுவனங்களில் மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

அத்துடன் மாயமாகும் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை கண்டறிந்து அவர்களை உரியவரிடம் ஒப்படைக்க தனிப்படை அமைத்து சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்