நீட் போன்ற நுழைவு தேர்வுகளில் கவனம் செலுத்துவதால் தமிழில் தோல்வி அடையும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
நீட் போன்ற நுழைவு தேர்வுகளில் அதிக கவனம் செலுத்துவதால் தமிழில் தோல்வி அடையும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்தார்.
சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரி வளாகத்தில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. மற்றும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோர் இணைந்து போலீஸ்காரர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களின் வாரிசுகளுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சியை நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியை தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் போலீஸ்காரர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களின் வாரிசுகளில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு டிப்ளமோ மற்றும் 11-ம் வகுப்பில் எந்த பாடப்பிரிவினை தேர்ந்தெடுப்பது என்பது குறித்தும், 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இளங்கலையில் எந்த பாடப்பிரிவினையை தேர்ந்தெடுப்பது என்பது குறித்தும், இளங்கலை, முதுகலை மற்றும் தொழில்நுட்ப கல்வி முடித்த வாரிசுகளுக்கு வேலை வாய்ப்புகள் குறித்தும் அறிவுரை, ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேசியதாவது:-
வேலை தேடும்போது தமிழ் மொழி, ஆங்கிலம் மொழி, கணினி மொழி, உடல் மொழி ஆகிய 4 மொழிகள் முக்கியமானவை. உலகத்தில் உங்களுக்கான இடத்தை தேடுங்கள். வேலைதான் அதை தீர்மானிக்கும். நானும், டாக்டருக்கு படிக்க ஆசை பட்டேன். நாங்கள் படிக்கும்போது என்ஜினீயரிங் கல்லூரி சீட் கிடைக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொண்டனர். ஆனால் இப்போது சீட் கிடைத்து கல்லூரியில் சேர பெற்றோர் வற்புறுத்தினால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டுகின்றனர்.
எந்த வேலை வேண்டுமானாலும் செய்யலாம். பிடித்து செய்தால் போதும். உயர் படிப்புகளுக்கு செல்ல நீட் போன்ற நுழைவு தேர்வுகளில் மாணவர்கள் அதிக கவனம் செலுத்துவதால் தாய் மொழியான தமிழ் மொழியில் தோல்வி அடையும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து இருக்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ் கற்று தருவதற்கான கல்வி மையங்கள் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினர்.