தடுப்பணையில் நீர்வரத்து அதிகரிப்பு
காரியாபட்டி அருகே பெய்த தொடர்மழையினால் தடுப்பணையில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
காரியாபட்டி,
காரியாபட்டி அருகே பெய்த தொடர்மழையினால் தடுப்பணையில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
தடுப்பணை
மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தேனி, மதுரை மாவட்டம் திருமங்கலம், பேரையூர் பகுதிகளில் மழை பெய்தால் குண்டாற்றில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். இந்தநிலையில் குண்டாற்றில் வரும் மழைத்தண்ணீர் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் பயன்படாதவாறு கடலாடி அருகே கடலில் கலந்து வரும் நிலை இருந்து வந்தது.
இதனால் காரியாபட்டி பகுதி மக்கள் குண்டாற்றின் குறுக்கே பந்தனேந்தல் கண்மாய்க்கு செல்லும் கால்வாய் அருகே தடுப்பணை கட்டினால் பந்தனேந்தல், திருச்சுழி பெரிய கண்மாய், தமிழ்பாடி உள்ளிட்ட பல்வேறு கண்மாய்களுக்கு தண்ணீர் செல்ல ஏதுவாக இருக்கும் என கோரிக்கை வைத்தனர். பொதுமக்கள் கோரிக்கையின் அடிப்படையில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது திருச்சுழி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த தங்கம் தென்னரசுவும் பந்தனேந்தல் கால்வாய் அருகே தடுப்பணை கட்டவேண்டும் என்று சட்டசபையில் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.10 கோடியே 10 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பில் தடுப்பணை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.
கசியும் நீர்
தடுப்பணை கட்டும் பணி முழுமையாக தற்போது முடிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பணையால் ஏராளமான கண்மாய்களுக்கு தண்ணீர் சென்று விவசாயம் செழிப்படைய ஏதுவாக இருக்கும். தடுப்பணையின் இருபுறங்களிலும் கரைகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த 4 நாட்களாக பெய்த மழைக்கு குண்டாற்றில் தண்ணீர் வந்து தடுப்பணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
தடுப்பணையில் தண்ணீர் தேங்கி உள்ளதால் தோனுகால், கரியனேந்தல், வக்கணாங்குண்டு, கணக்கனேந்தல், கல்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார சிறுவர்கள், இளைஞர்கள் தண்ணீரில் குதித்து விளையாடி வருகின்றனர். தடுப்பணையில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அங்கு உள்ள மதகுகளில் இருந்து தண்ணீர் அதிக அளவில் வீணாக கசிந்து வருகிறது. மேலும் புதிதாக கட்டப்பட்ட மதகுகளையும், கரைகளையும் சரிசெய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.