கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு, கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு, கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Update: 2023-10-12 20:12 GMT

மேட்டூர்

கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு, கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணை

தமிழகம், கர்நாடகா மற்றும் கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கை கொடுக்கவில்லை. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்த நிலையிலேயே இருந்து வருகிறது. மேட்டூர் அணையை பொறுத்தவரை கடந்த 3 நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 200 கனஅடிக்கு கீழே நீர்வரத்து இருந்து வந்தது. இந்த நிலையில் தமிழக, கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இதனால் கர்நாடக மாநில கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து நேற்று முன்தினம் வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று முதல் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது. அதன்படி வினாடிக்கு 4,598 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

நீர்வரத்து அதிகரிப்பு

இந்த தண்ணீர் தமிழக- கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவை கடந்து ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்தடைந்தது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கடந்த 10-ந் தேதி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 163 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்தானது நேற்று முன்தினம் வினாடிக்கு 2 ஆயிரத்து 525 கன அடியாக அதிகரித்தது. இது நேற்று மேலும் அதிகரித்து வினாடிக்கு 9,045 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

33.10 அடியாக உயர்வு

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மட்டும் வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவைவிட அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த 2 நாட்களாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 31.31 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று 33.10 அடியாக உயர்ந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்