வரத்து அதிகரிப்பு:தக்காளி விலை கடும் வீழ்ச்சி- ஒரு கிலோ ரூ.25-க்கு விற்பனை- முருங்கைகாய் விலையும் வீழ்ச்சி
வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது, ஒரு கிலோ ரூ.25-க்கு விற்பனை ஆனது.முருங்கைகாய் விலையும் வீழ்ச்சி அடைந்தது
வரத்து அதிகரித்ததால் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்தது. ஒரு கிலோ ரூ.25-க்கு விற்பனையானது.
வரத்து அதிகரிப்பு
தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக, தக்காளியின் விலை அதிகமாக இருந்தது. வெளி மாநிலங்களில் மழைக்காரணமாக இந்த விலையேற்றம் இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். அந்த காலங்களில் மதுரையில் ஒரு கிலோ தக்காளியின் விலையானது ரூ.200 தாண்டி விற்பனையானது. ஆனால், தற்போது வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி அதிக அளவில் வரத்து இருப்பதால், தக்காளியின் விலை படிப்படியாக குறைய தொடங்கி இருக்கிறது.
அதன்படி நேற்று மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் 15 கிலோ எடை கொண்ட, தக்காளி பெட்டியின் விலை ரூ.200 முதல் ரூ.250 வரை இருந்தது. விலை குறைவின் காரணமாக, மாட்டுத்தாவணியில் சில்லறை விலையில் தரத்தை பொறுத்து ரூ.15, ரூ.25 என விற்பனையானது. இதனை தவிர்த்து, வெளி இடங்களில் உள்ள கடைகள், மளிகை கடைகள், சின்ன சின்ன மார்க்கெட்டுகளில் தக்காளியின் விலை அதிகபட்சமாக ரூ.30 வரை இருந்தது.
விலை விவரம்
இதுபோல், ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.40,ரூ.60-க்கு விற்பனையாகிறது. கிலோ கணக்கில், பெரிய வெங்காயம் ரூ.20, ரூ.40 எனவும், இஞ்சி புதியது ரூ.100, இஞ்சி பழையது ரூ.250, மிளகாய் உருட்டு ரூ.50, மிளகாய் சம்பா ரூ.50, கத்தரிக்காய் ரூ.30, வெண்டைக்காய் ரூ.10, புடலங்காய் ரூ.25, பாகற்காய் ரூ.40, உருளைக்கிழங்கு ரூ.40, கேரட் ரூ.50, முட்டைக்கோஸ் ரூ.25 என விற்பனையானது.
முருங்கைகாய் விலையும் வீழ்ச்சி
மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் முருங்கைக்காயின் விலை படிப்படியாக வீழ்ச்சி அடைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.30-க்கு விற்பனையாகிறது.
கடந்த மாதத்தில் முருங்கைக்காயின் விலை அதிகமாக இருந்தது. ஆனால், தற்போது அதன் விலை படிப்படியாக குறைந்து உள்ளது. இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-
மாட்டுத்தாவணி மார்க்கெட்டுக்கு திருச்செந்தூர் உடன்குடி, திசையன்விளை, விளாத்திகுளம், ஒட்டன்சத்திரம், ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி, வலையப்பட்டி போன்ற இடங்களில் இருந்தும், குஜராத், மும்பை போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் சீசனை பொறுத்து தினமும் 15 டன் முதல் 20 டன் வரை முருங்கைக்காய் விற்பனைக்காக வருகின்றன. சீசன் இல்லாத சமயத்தில், ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.400 வரை செல்லும். தற்போது வரத்து அதிகமாக இருப்பதால் விலை குறைந்துள்ளது என்றனர்.