குமரியில் அரிசி, மளிகை பொருட்கள் விலை அதிகரிப்பு

குமரி மாவட்டத்தில் அரிசி, மளிகை பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ சீரகம் ரூ.280 உயர்ந்துள்ளது.

Update: 2023-06-11 19:51 GMT

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் அரிசி, மளிகை பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ சீரகம் ரூ.280 உயர்ந்துள்ளது.

மளிகை பொருட்கள்

அரசுக்கு பட்ஜெட் எப்படி முக்கியமோ, அதுபோல குடும்பங்களில் இல்லத்தரசிகளின் மாதாந்திர வீட்டு பட்ஜெட்டும் மிகவும் முக்கியமானது. வீட்டு பட்ஜெட்டில் எப்போதுமே முதலிடம் என்றால் அது மளிகை பொருட்களாக தான் இருக்கும். மளிகை பொருட்களை வாங்கி சமையலறையில் இருப்பு வைத்தாலே இல்லத்தரசிகளுக்கு பாதி நிம்மதி கிடைத்துவிடும். அவ்வப்போது மளிகை பொருட்களில் விலையேற்றம் ஏற்படும் போதெல்லாம் பட்ஜெட்டில் துண்டு விழும். அப்போது இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியே மேலோங்கும். இதனால் சமையலில் பயன்படுத்தும் பொருட்களின் அளவும் குறைய தொடங்கும். அப்படி ஒரு நிலை தற்போது ஏற்பட்டு இருக்கிறது.

சீரகம் விலை உயர்வு

ஏன் எனில் தமிழகம் முழுவதும் அரிசி மற்றும் மளிகை பொருட்களின் விலை அதிகரித்து இருக்கிறது. குமரி மாவட்டத்தின் முக்கிய மார்க்கெட்டான நாகர்கோவில் கோட்டார் மார்க்கெட்டை பொருத்த வரை மளிகை பொருட்களின் விலை ரூ.10 முதல் ரூ.15 வரை அதிகரித்து உள்ளது.

அதிலும் சீரகத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. அதாவது கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரூ.260-க்கு விற்பனை ஆன ஒரு கிலோ சீரகம் ரூ.280 உயர்ந்து தற்போது ரூ.540-க்கு விற்பனை ஆகிறது.

பாமாயில்

அரிசியை பொறுத்த வரை ரூ.50 முதல் ரூ.55 வரை விற்பனை ஆகிய வந்த பொன்னி அரிசி தற்போது ரூ.60 முதல் ரூ.65 வரை விற்பனை ஆகிறது. மேலும் பச்சரிசி, பாசுமதி அரிசி, பிரியாணி அரிசி ஆகிய அரிசிகளின் விலையும் உயர்ந்திருக்கிறது. அதே சமயம் பாமாயில் விலை குறைந்துள்ளது. அதாவது ரூ.95-க்கு விற்பனையான ஒரு லிட்டர் பாமாயில் ரூ.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல கோட்டார் மார்கெட்டில் மற்ற பொருட்களின் விலை விவரம் வருமாறு:-

துவரம் பருப்பு-ரூ.160, சிறுபருப்பு-ரூ.110, உளுந்தம் பருப்பு-ரூ.120, உருட்டுகடலை-ரூ.70, கடலை பருப்பு-ரூ.80, மிளகாய் தூள்-ரூ.400, மஞ்சள் தூள்-ரூ.170, சோம்பு-ரூ.330, கடுகு-ரூ.110, வெந்தயம்-ரூ.110, மைதா-ரூ.45 முதல் ரூ.60 வரை, சீனி-ரூ.40, புளி-ரூ.90, பூண்டு-ரூ.90 முதல் ரூ.160 வரை, முந்திரி-ரூ.650 முதல் ரூ.700 வரை, திராட்சை-ரூ.300, சன்பிளவர்-ரூ.115, பச்சை பட்டாணி-ரூ.70, பச்சரிசி-ரூ.40 என்ற விலையில் விற்பனை ஆனது.

வரத்து குறைவு

அரிசி மற்றும் மளிகை பொருட்கள் விலை உயர்வு குறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது, "கோட்டார் மார்க்கெட்டில் கடந்த ஒரு மாதமாகவே மளிகை பொருட்களின் விலை ஏறுமுகமாக தான் இருக்கிறது. அனைத்து பொருட்களுமே வரத்து குறைவாக இருக்கிறது. இன்னும் ஒரு மாதம் வரை இதே விலை தான் நீடிக்கும். ஆகஸ்டு மாதம் தொடக்கத்தில்தான் மீண்டும் பழைய விலைக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம்" என்றனர். அதுவே போக்குவரத்து, வண்டி-ஆட்கள் கூலி போன்ற காரணங்களால் வெளி மார்க்கெட் மற்றும் கடைகளில் மளிகை பொருட்களின் விலை ரூ.10 முதல் ரூ.15 வரை அதிகமாக விற்பனை செயப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்