சென்னையில் 'புரொபஷனல் கூரியர்' நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை

வரி ஏய்ப்பு புகார் எதிரொலியாக ‘புரொபஷனல் கூரியர்' நிறுவனத்துக்கு சொந்தமாக சென்னையில் உள்ள 6 இடங்களில் வருமானவரித்துறையினர் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் கூறினர்.

Update: 2023-01-04 23:14 GMT

சென்னை,

'புரொபஷனல் கொரியர்' என்ற தனியார் கூரியர் நிறுவனம் கடந்த 1989-ம் ஆண்டு தொடங்கப்பட்டு கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு இந்தியா, துபாய், சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சுமார் 3 ஆயிரத்து 300 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் சென்னை நுங்கம்பாக்கம், கத்தீட்ரல் கார்டன் பகுதியிலும், பதிவு அலுவலகம் சென்னை ஆழ்வார்பேட்டையிலும் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தினர் முறையாக வருமானவரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்து வருவதாக வருமானவரி துறை அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது. அதனடிப்படையில் இந்த நிறுவனம் கடந்த காலங்களில் தாக்கல் செய்த வருமானவரி கணக்குகளை ஆய்வு செய்ததுடன், ரகசியமாகவும் நிறுவனத்தின் செயல்பாடுகளையும் வருமானவரித்துறையினர் கண்காணித்து வந்தனர்.

6 இடங்களில் சோதனை

இந்தநிலையில் கூரியர் நிறுவனத்துக்கு சொந்தமான சென்னை மண்டலத்திற்கு தொடர்புடைய நுங்கம்பாக்கம், பாரிமுனை, ஆழ்வார்பேட்டை, கிண்டி, மண்ணடி, கோயம்பேடு ஆகிய 6 இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று காலை 8 மணி அளவில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் சுமார் 50 அதிகாரிகள் ஈடுபட்டனர்.

சோதனையின் முடிவில் முக்கியமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. சோதனை முழுமையாக முடிந்த பின்பே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் கணக்கில் காட்டப்படாத பணம், நகைகளின் மதிப்பு எவ்வளவு? என்பது குறித்த தகவல்கள் வெளியாகும் என்று வருமானவரித்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா காலகட்டத்தில்...

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த காலகட்டத்தில் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே செல்ல முடியாத நிலை இருந்த போது, கூரியர் மூலம் தகவல் தொடர்பு மற்றும் பொருட்கள் பரிமாற்றம் அதிக அளவில் நடைபெற்றுள்ளது. இவ்வாறு வியாபாரம் அதிகரித்த நிலையில் முறையான கணக்குகள் காட்டப்படவில்லை என்ற குற்றச்சாட்டுடன் வரிஏய்ப்பு நடைபெற்றதாக புகார் எழுந்தது.

அதன் அடிப்படையில் சோதனை நடைபெற்றது. தொடர்ந்து 2 நாட்கள் சோதனை நடக்க வாய்ப்பு உள்ளது என்று வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்