நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதிப்பு: மதுரையில் கடந்த 4 நாட்களில் 16 பேருக்கு கொரோனா
மதுரையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கடந்த 4 நாட்களில் 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இணை நோய் உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
மதுரையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கடந்த 4 நாட்களில் 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இணை நோய் உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகமாகி வருகிறது. கடந்த காலங்களில் தினமும் 100-க்கும் குறைவான நபர்கள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தினசரி பாதிப்பு 400-ஐ கடந்துள்ளது. அந்த வகையில் நேற்று முன்தினம் கூட 401 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதிகபட்சமாக சென்னையில் 110 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
மதுரையிலும் தினசரி பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. அதன்படி மதுரையில் கடந்த 4 நாட்களில் 16 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நேற்றும் 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, கொரோனா பாதிப்பால் மதுரையில் 38 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் வீட்டு தனிமைப்படுத்துதலில் டாக்டர்களின் கண்காணிப்பில் இருக்கிறார்கள். ஒரு சிலர் மட்டுமே அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா வார்டு
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் புதிதாக கொரோனா வார்டு தொடங்கப்பட்டுள்ளது. அங்கு 34 படுக்கைகளும், தேவையான மருத்துவ உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளன.
இதுகுறித்து அரசு டாக்டர்கள் கூறுகையில், மதுரையில் தினசரி பாதிப்பு உயர்ந்து வருகிறது. நாளொன்றுக்கு 5 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதற்கு ஏற்றார்போல், தினசரி கொரோனா பரிசோதனையும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள், வீட்டு தனிமைப்படுத்துதலில் சிகிச்சையில் இருக்கின்றனர். மூச்சு திணறல் ஏற்படுபவர்கள் மட்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.
தற்போது பரவி வரும் இந்த வகை கொரோனா, இணை நோயாளிகளை குறி வைத்து தாக்குகிறது. எனவே, இணை நோய் உள்ளவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். பொது இடங்களுக்கு செல்லும்போது, கண்டிப்பான முறையில் முககவசம் அணிந்திருக்க வேண்டும். முககவசம் அணிந்தால், நோய் பரவல் குறைய வாய்ப்பு ஏற்படும் என்றனர்.