தொடர் மழையால் ஆரஞ்சு விளைச்சல் பாதிப்பு
கொடைக்கானலில் தொடர் மழையால் ஆரஞ்சு விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஆரஞ்சு சாகுபடி
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள மலைக்கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக அடுக்கம், வெள்ளக்கெவி, பாலமலை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு உள்ளிட்ட மலைக்கிராமங்களில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஆரஞ்சு ஊடுபயிராக சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதிகளில் விளையும் ஆரஞ்சு அதிக சுவையுடன் இருப்பதால் சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட வெளியூர் மார்க்கெட்டில் அதற்கு தனிமவுசு உள்ளது.
இந்தநிலையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால் ஆரஞ்சு விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, திருச்சி உள்ளிட்ட வெளியூர் மார்க்கெட்டுகளுக்கு மராட்டிய மாநிலம் நாக்பூரில் இருந்து நாக்பூர் ஆரஞ்சு பழங்கள் அதிக அளவு வரத்தாகியுள்ளது. இதனால் கொடைக்கானல் ஆரஞ்சு பழத்தின் விலையும் சரிந்துவிட்டது.
விளைச்சல் பாதிப்பு
ஒருபுறம் விளைச்சல் பாதிப்பு, மறுபுறம் விலை குறைவால் கொடைக்கானலை சேர்ந்த ஆரஞ்சு சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து அடுக்கத்தை சேர்ந்த விவசாயி செல்வம் கூறியதாவது:-
கொடைக்கானல் மலைப்பகுதியில் இந்த ஆண்டு தொடர் மழையால் ஆரஞ்சு பழங்கள் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒரு கிலோ ஆரஞ்சு பழம் ரூ.50 ரூபாய் வரை விற்பனையானது. ஆனால் இந்த ஆண்டு அதன் விலை கிலோ ரூ.20-க்கு விற்பனையாகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுதவிர பல்வேறு பகுதிகளில் ஆரஞ்சு பழங்களில் நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதும் விளைச்சல் பாதிப்புக்கு காரணம். எனவே தோட்டக்கலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, மலைக்கிராம விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தொகை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.