தொடர் மழை: மயிலாடுதுறையில் 25,000 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் ஒரேநாளில் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Update: 2024-01-08 06:21 GMT

சென்னை,

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென்தமிழகம், வட தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இன்று முதல் 7 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

அதன்படி, தமிழ்நாட்டின் நாகப்பட்டினம், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், திருவாரூர், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, அரியலூர், கள்ளக்குறிச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சீர்காழியில் 24 செ.மீ., மழைப்பதிவாகியுள்ளது. சிதம்பரத்தில் 23 செ.மீ., வேளாங்கண்ணியில் 22 செ.மீ., திருவாரூர், நாகையில் தலா 21 செ.மீ., மழைப்பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. தரங்கம்பாடி, குத்தாலம், மணல்மேடு உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த 25,000 ஏக்கருக்கு மேல் சம்பா பருவ நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கும்பகோணம் அருகே வில்லியவரம்பல், செம்பியவரம்பல் தண்டம்தோட்டம் ஆகிய இடங்களில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையில் 1,000 ஏக்கர் சம்பா பருவ நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்தன. கடலூரில் பெய்து வரும் தொடர் மழையால் மாவட்டம் முழுவதும் 50,000 ஏக்கருக்கு மேல் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் ஒரேநாளில் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்