குமரியில் தொடர் மழைக்கு ஒரே நாளில் 9 வீடுகள் இடிந்து சேதம்

குமரி மாவட்டத்தில் தொடர் மழைக்கு நேற்று ஒரே நாளில் 9 வீடுகள் இடிந்தன. 26 மரங்கள் சாய்ந்தன. திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது.

Update: 2023-10-16 18:45 GMT

குமரி மாவட்டத்தில் மலை பகுதி, அணை பகுதிகளில் கடந்த 14-ந் தேதி விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது. மாம்பழத்துறையாறு உள்ளிட்ட 6 இடங்களில் 150 மி.மீட்டருக்கும் மேல் மழை பதிவாகியிருந்தது.

இதனால் அழிக்கால் பிள்ளைதோப்பு, முன்சிறை, பாலாராமபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் குடியிருப்புவாசிகள் கடுமையாக சிரமப்பட்டனர். திக்குறிச்சி உள்ளிட்ட ஒரு சில இடங்களில் விளை நிலங்களிலும் மழை வெள்ளம் புகுந்தது. இந்த வெள்ளத்தை வெளியேற்றும் பணி நடக்கிறது.

மேலும் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு, மழை நீடிப்பால் கோதையாறு, வள்ளியாறு, தாமிரபரணி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

திற்பரப்பு அருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நீடிப்பதால் அங்கு குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு 5-வது நாளாக தடை விதிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்தது. நாகர்கோவிலில் வெயிலும், மேகமூட்டமாகவும் மாறி, மாறி காணப்பட்டது.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணை பகுதி மற்றும் திற்பரப்பு, களியல், கடையாலுமூடு, குலசேகரம், பொன்மனை உள்ளிட்ட இடங்களில் சிறிது நேரம் கனமழை பெய்தது.

தொடர் மழையால் ரப்பர் தோட்டங்களில் பால் வடிப்புத் தொழில் முடங்கியுள்ளது. மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையில் அதிகபட்சமாக சிற்றார்-2 பகுதியில் 34.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

இதேபோல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

சிற்றார் 1-24.6, களியல்-3.2, பேச்சிப்பாறை- 12.4, பெருஞ்சாணி- 19.8, புத்தன்அணை- 17.6, தக்கலை- 3.2, பாலமோர்-5.2, மாம்பழத்துறையாறு- 3.2, திற்பரப்பு- 4.5, கோழிப்போர்விளை- 2.3, அடையாமடை- 2.1, குருந்தன்கோடு- 2, முள்ளங்கினாவிளை- 4.6 மி.மீ. மழை பெய்திருந்தது.

மேலும் தொடர் மழையால் பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 1,451 கனஅடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 1,180 கனஅடி தண்ணீரும், சிற்றார் 1 அணைக்கு வினாடிக்கு 1,148 கனஅடி தண்ணீரும், மாம்பழத்துறையாறு அணைக்கு வினாடிக்கு 51 கனஅடி தண்ணீரும், முக்கடல் அணைக்கு வினாடிக்கு 8.9 கனஅடி தண்ணீரும் வந்தது.

சிற்றார்-1 அணையில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி தண்ணீரும், பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 200 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.

அதே சமயம் பெருஞ்சாணி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. தொடர் மழையால் நேற்று விளவங்கோடு தாலுகாவில் 5 வீடுகளும், திருவட்டார் தாலுகாவில் 4 வீடுகளும் என மொத்தம் 9 வீடுகள் இடிந்துள்ளன. மேலும் கல்குளம் தாலுகாவில் ஒரு மரமும், விளவங்கோடு தாலுகாவில் 25 மரங்களும் சாய்ந்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்