தொடர்மழை - கன்னியாகுமரி மாவட்டத்தில் 107 குளங்கள் நிரம்பின

தொடர்மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 107 குளங்கள் நிரம்பியுள்ளன.

Update: 2024-05-24 15:28 GMT

கன்னியாகுமரி,

தென் தமிழகத்தையொட்டி உள்ள கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தென்காடி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதுஒருபுறம் இருக்க கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குமரி மாவட்டம் முழுவதும் கனமழை நீடித்து வருகிறது. நேற்று இரவு மாவட்டம் முழுவதும் இடைவிடாது மழை பெய்து கொண்டே இருந்தது.

மலையோரம் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்துவருவதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் உள்ளிட்ட அணைகளின் நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. இதனால் அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கோதையாறு, குழித்துறை தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

பேச்சிப்பாறையில் நேற்று இரவு மழை வெளுத்து வாங்கியது. அங்கு அதிகபட்சமாக 75.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நாகர்கோவிலில் இன்று காலையில் வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்தது. கன்னியாகுமரி, அஞ்சுகிராமம், ஆரல்வாய் மொழி, சுசீந்திரம், தக்கலை, திருவட்டார், மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் இன்று காலையில் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் மாவட்டம் முழுவதும் ரம்யமான சூழல் நிலவி வருகிறது.

மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை வெளுத்து வாங்கி வருவதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாா், அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து கணிசமான அளவு உயர்ந்துள்ளது. இதனால் பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 520 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்ட நிலையில், நேற்று வினாடிக்கு 1,007 கனஅடி தண்ணீர் உபரியாக வெளியேற்றப்பட்டது.

பேச்சிப்பாறை அணையில் இருந்து அதிக அளவு உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் குழித்துறை ஆறு, கோதையாறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. குழித்துறை சப்பாத்து பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்வதை காணமுடிந்தது. கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியை மூழ்கடித்து தண்ணீர் கொட்டுவதால் அருவியில் குளிப்பதற்கு இன்று 6-வது நாளாக தடை விதிக்கப்பட்டது.

ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் குளங்களிலும் தண்ணீர் நிரம்பி வருகின்றன. மாவட்டத்தில் உள்ள 2,040 குளங்களில் இதுவரை 107 குளங்கள் நிரம்பி உள்ளது. 75 சதவீதம் அளவு தண்ணீருடன் 580 குளங்களும், 50 சதவீதம் தண்ணீருடன் 610 குளங்களும் நிரம்பி உள்ளன.

மழை காரணமாக இன்று ஒரே நாளில் 14 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. வீடுகள் இடிந்ததில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதன்மூலம் கடந்த 10 நாட்களில் 33 வீடுகள் இடிந்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்