சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி: ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 3 நாட்கள் நின்று செல்ல ஏற்பாடு

சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 3 நாட்கள் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-12-12 13:01 GMT

திருச்சி,

பூலோக வைகுண்டாக போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் வைகுண்ட ஏகாதசி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டுக்கான விழா வருகிற 22-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது. அதற்கு மறுநாள் முதல் பகல் பத்து உற்சவம் தொடங்கி, வருகிற ஜனவரி 2-ந்தேதி சிகர நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு நடக்கிறது. இதற்கான பந்தல் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களின் வசதிக்காக ரெயில்வே நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன்படி வருகிற 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை 3 நாட்களுக்கு சென்னை எழும்பூர்-மதுரை-சென்னை எழும்பூர் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் கொல்லம்-சென்னை எழும்பூர் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே திருச்சி கோட்ட முதுநிலை வணிக மேலாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வருகிற ஜனவரி 2-ந்தேதி நடைபெறவுள்ள சொர்க்கவாசல் திறப்பு நாளன்று பக்தர்களின் வசதிக்காக வண்டி எண்: 12635 சென்னை எழும்பூர்-மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தில் மாலை 6.08 மணி முதல் 6.10 மணி வரை நின்று செல்லும்.

வண்டி எண்: 12636 மதுரை-சென்னை எழும்பூர் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 9.38 மணி முதல் 9.40 மணி வரை நின்று செல்லும். இதேபோல் வண்டி எண்: 16102 கொல்லம்-சென்னை எழும்பூர் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 9.38 மணி முதல் 9.40 மணி வரையிலும், வண்டி எண்: 16101 சென்னை எழும்பூர்-கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 9.18 மணி முதல் 9.20 மணவி வரையிலும் நின்று செல்லும். இந்த ரெயில்கள் 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை 3 நாட்கள் ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.

இவ்வாறு அவர் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்