தூத்துக்குடியில் மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-09-16 18:45 GMT

தூத்துக்குடியில், மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், மின்கட்டண உயர்வை கண்டித்து தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசும்போது,

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வோம், மாதம் தோறும் மின்கட்டணம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பது போன்ற பல திட்டங்களை அறிவித்தார்கள். எந்தவிதமான வரியும் உயர்த்த மாட்டோம் என்றார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்துக்குள் சொத்து வரி உயர்வு, மின்கட்டணத்தையும் உயர்த்தி உள்ளனர்.

மக்கள் முடிவு

அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு எந்தவித வரியும் விதிக்கப்படவில்லை. தி.மு.க. கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்டு கட்சிகளும் வாய்திறக்காமல் உள்ளனர். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை தருவோம் என்று கூறினார்கள். ஆனால் எதையும் செயல்படுத்தவில்லை. தி.மு.க.வை சேர்ந்த ராசா, ஒரு மதத்தினரை அவதூறாக பேசி உள்ளார். மக்களை கசக்கி பிழியும் இந்த ஆட்சி தேவைதானா? என்று மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும், என்று கூறினார்.

தொடர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

கலந்து கொண்டவர்கள்

ஆர்ப்பாட்டத்தில் மாநில அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட அவைத்தலைவர் வக்கீல் திருப்பாற்கடல், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா.சுதாகர், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் கவுன்சிலர் வீரபாகு,  முன்னாள் அரசு வக்கீல்கள் சுகந்தன் ஆதித்தன், கோமதி மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்