தூத்துக்குடியில்2 ரேஷன் கடைகளில் மீண்டும் தக்காளி விற்பனை தொடக்கம்:ஒரு கிலோ ரூ.60
தூத்துக்குடியில் 2 ரேஷன் கடைகளில் மீண்டும் தக்காளி விற்பனை தொடங்கியது. ஒரு கிலோ ரூ.60-க்கு விற்கப்பட்டது
தூத்துக்குடியில் 2 ரேஷன் கடைகளில் புதன்கிழமை முதல் மீண்டும் தக்காளி விற்பனை தொடங்கப்பட்டு உள்ளது. இங்கு ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதை பொதுமக்கள் நீண்டவரிசையில் நின்று போட்டி போட்டு வாங்கி சென்றனர்.
தக்காளி
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. தக்காளி வரத்து குறைவு காரணமாக தினமும் தக்காளி விலை அதிகரித்து கொண்டே வந்தது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த கூட்டுறவு துறை மூலம் அரசே தக்காளி விற்பனையை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள 67 பண்ணை பசுமை காய்கறி அங்காடிகள் மற்றும் ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தூத்துக்குடியில் பண்ணை பசுமை காய்கறி அங்காடி மற்றும் மாநகரில் உள்ள 15 ரேஷன் கடைகளிலும் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் மக்கள் மிகவும் பயனடைந்து வந்தனர். கடந்த வாரம் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை நிறுத்தப்பட்டது. பண்ணை பசுமை காய்கறி அங்காடியிலும் விலை அதிகரித்தது. இந்த நிலையில் அமைச்சர் பெரியகருப்பன், மீண்டும் ரேஷன் கடைகளில் ரூ.60-க்கு தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அறிவித்தார்.
விற்பனை தொடக்கம்
அதன்படி புதன்கிழமை தூத்துக்குடியில் உள்ள 2 ரேஷன் கடைகளில் மீண்டும் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை தொடங்கியது. ஒவ்வொரு கடைகளுக்கும் தலா 25 கிலோ தக்காளி வழங்கப்பட்டு, பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. பண்ணை பசுமை காய்கறி அங்காடிக்கு நேற்று 580 கிலோ தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு இருந்தது. இந்த தக்காளி ரூ.90-க்கு கொள்முதல் செய்யப்பட்டு ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். நேற்று நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் தக்காளியை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
மார்க்கெட்டில் ரூ.140
அதே நேரத்தில் உச்சம் நோக்கி சென்ற தக்காளி விலை தற்போது மெல்ல மெல்ல குறையத் தொடங்கி இருக்கிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரூ.200-க்கு விற்பனையான தக்காளி, நேற்று முன்தினம் ரூ.150 ஆக குறைந்தது. நேற்று மேலும் குறைந்து தூத்துக்குடி மார்க்கெட்டில் ரூ.140-க்கு விற்பனையானது. மேலும் விலை குறையும் என்று வியாபரிகள் தெரிவித்து உள்ளனர்.