தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க செல்போன் எண்
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க செல்போன் எண்ணை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை குறித்து தகவல் தெரிவிக்க பிரத்யோக செல்போன் எண்ணை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வெளியிட்டார்.
கஞ்சா விற்பனை தொடர்பாக..
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வாட்ஸ்அப் வசதியுடன் கூடிய புதிய செல்போன் எண் அறிமுகப் படுத்தப்பட்டு உள்ளது. அதனை நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வெளியிட்டார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்களது சொத்துக்கள் முடக்கப்பட்டு, குண்டர் தடுப்பு சட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக பொதுமக்களின் பங்களிப்பை பெறும் வகையில், கஞ்சா விற்பனை தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் காவல்துறையிடம் தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவரின் பெயர் உள்ளிட்டவைகள் ரகசியமாக வைக்கப்படும்.
புதிய செல்போன் எண்
கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் குறித்த தகவல்கள் தெரிவிக்க காவல்துறையில் இருந்து 8300014567 என்ற செல்போன் எண் பிரத்யோகமாக வழங்கப்பட்டு உள்ளது. இதில் வாட்ஸ் மூலமாகவும் தகவல்களை அனுப்பலாம். இந்த எண்ணில் தகவல் தெரிவித்து, தூத்துக்குடி மாவட்டத்தை கஞ்சா புழக்கம் இல்லாத மாவட்டமாக மாற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த எண் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
37 பேர் மீது குண்டாஸ்
இந்த ஆண்டு இதுவரை கஞ்சா மற்றும் போதை பொருட்கள் வழக்கில் சம்பந்தப்பட்ட 37 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர். 208 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதை விழிப்புணர்வு பேரணி, கருத்தரங்கம் உள்ளிட்டவைகள் நடத்தப்பட்டு வருகிறது. கஞ்சாவை தொடர்ந்து பயன்படுத்துபவர்கள் ஆண்மையற்றவர்களாக ஆகிவிடுவார்கள். இதனை இளைஞர்கள் கண்டிப்பாக உணர வேண்டும்.
மாவட்டத்தில் பழக்குக்பழி கொலைகளை தடுக்கும் வகையில் 3 அடுக்கு வைத்து ரவுடிகளை கண்காணிக்கிறோம்.
குற்றப்பத்திரிக்கை
குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் மீது குண்டாஸ் பதிவு செய்யப்படுகிறது. கடந்த 5 மாதங்களில் நடந்த கொலை உள்ளிட்ட அனைத்து வழக்குகளுக்கும் 90 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், காவல்துறையிடம் மனு வழங்க வருபவர்களை தற்கொலைக்கு தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'என்று கூறினார்.