திருவாரூரில், 96 டிகிரி வெயில் சுட்டெரித்தது

கோடைக்காலம் தொடங்கிய நிலையில், திருவாரூரில் வெயில் 96 டிகிரியை தாண்டி சுட்டெரித்து வருகிறது. வெயிலின் தாக்கத்தை தணிக்க குளிர்பான கடைகளை தேடி மக்கள் செல்கின்றனர்.

Update: 2023-04-11 18:45 GMT


கோடைக்காலம் தொடங்கிய நிலையில், திருவாரூரில் வெயில் 96 டிகிரியை தாண்டி சுட்டெரித்து வருகிறது. வெயிலின் தாக்கத்தை தணிக்க குளிர்பான கடைகளை தேடி மக்கள் செல்கின்றனர்.

கோடைக்காலம்

ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலம் தொடங்கி விட்டாலே, கோடையை சமாளிக்க பொதுமக்கள் படாத பாடுபடுவார்கள். இந்த ஆண்டு கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.

தொடக்கத்திலேயே வெயில் சுட்டெரித்து வருவதால் அக்னி நட்சத்திர கால கட்டத்தில் வெயில் இன்னும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் பல இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்திலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

அனல் காற்று

இந்த வெயில் கொடுமையினால் பொதுமக்கள் பகல் நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே வருவதற்கே தயங்குகின்றனர். வேறு வழியில்லாத நிலையில் குடை பிடித்துக்கொண்டும், வாகனங்களில் செல்பவர்கள் துணியால் தங்கள் தலையை மூடியபடியும் வெளியில் சென்று வருகின்றனர்.

வெளியில் தான் இந்த நிலைமை என்றால், வீடுகளிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. மேலும் பகல் நேரத்தில் வெயில் கொடுமை என்றால், இரவில் வெயிலின் தாக்கத்தினால் புழுக்கம் அதிகமாக இருந்தது. இரவு நேரங்களில் மின்விசிறியில் இருந்து வரும் காற்றும் அனல்காற்றாகவே வீசுகிறது.

96.8 டிகிரி வெயில்

திருவாரூரில் கடந்த சில நாட்களாக மேகமூட்டமாக காணப்படுவதும், வெயில் அடிப்பதுமாக இருந்து வந்தது. மேலும் கடந்த சில நாட்களாக வெயிலின் அளவு 90 டிகிரி, 93 டிகிரி என இருந்தது. இந்தநிலையில் நேற்று வெயில் அதிகமாக காணப்பட்டது. திருவாரூரில் 96.8 டிகிரி வெயில் சுட்டெரித்தது.

இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது. வெயிலை சமாளிப்பதற்காக பெரும்பாலானோர் பகல் நேரங்களில் வீடுகளிலேயே முடங்கினர். சாலைகளில் கானல்நீர் தென்பட்டது.

வெயிலின் தாக்கத்தை சமாளிக்க குளிர்பான கடைகளை தேடி மக்கள் செல்கின்றனர்.

நுங்கு விற்பனை அமோகம்

இதனால் திருவாரூர் நகரில் பல்வேறு இடங்களில் சாலை ஓரங்களில் உள்ள நுங்கு, இளநீர், பதநீர், தர்பூசணி போன்ற கடைகளில் நேற்று விற்பனை அதிகமாக நடைபெற்றது.

திருவாரூர் கல்பாலம் அருகே சுற்றுலா மாளிகை பகுதி, நாகை சாலை, மருத்துவக்கல்லூரி சாலை, விளமல், துர்க்காலயா சாலை உள்ளிட்ட இடங்களில் நுங்கு விற்பனை அமோகமாக நடைபெற்றது. பொதுமக்களும் காத்திருந்து நுங்கு வாங்கிச்சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்