திருவாலங்காடு ஒன்றியத்தில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூ.19 கோடியில் மேம்பாலம் கட்டும் பணி தீவிரம்

திருவாலங்காடு ஒன்றியத்தில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூ.19 கோடியில் மேம்பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

Update: 2023-04-07 09:48 GMT

திருவள்ளூர் மாவட்டத்தில், திருவாலங்காடு ஒன்றியத்தில் திருவாலங்காடு-பேரம்பாக்கம் மாநில நெடுஞ்சாலை, ஓரத்தூர் வழியாக கொசஸ்தலையாறு செல்கிறது. இங்கு ஆற்றின் குறுக்கே 300 மீட்டர் நீளமும், 5 அடி உயரத்திற்கு தரைப்பாலம், 1998-ம் ஆண்டு, திருத்தணி நெடுஞ்சாலை துறையினரால் கட்டப்பட்டது. இந்த தரைப்பாலம் வழியாக சின்னம்மாபேட்டை, ஓரத்தூர், பொன்னாங்குளம், மணவூர் உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், பூந்தமல்லி உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று வருகின்றனர். மழை காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது வெள்ளம் தரைப்பாலத்தை மூழ்கடித்து பாலத்தின் மேலே செல்லும். இதனால் மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் வேலை, பள்ளி, கல்லூரி, ஆஸ்பத்திரி, வட்டார வளர்ச்சி அலுவலகம், தாலுகா அலுவலகம், போலீஸ் நிலையம் செல்ல முடியாமல் குறைந்தது 12 கி.மீ. தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

இந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் தரைப்பாலம் சேதமடைந்தது. இதனால் ஒரு மாதம் வரை தரைப்பாலத்தை கடந்து நீர் சென்றது. எனவே அந்த பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும் தரைப்பாலத்தை பலப்படுத்த அமைக்கப்பட்ட கற்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் தரைப்பாலம் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அச்சம் அடைந்தனர். இதையடுத்து தரைபாலத்தை அகற்றி விட்டு மேம்பாலம் கட்டி தர வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கோரிக்கையை ஏற்று நெடுஞ்சாலைத் துறையினர் ஓரத்தூர்- பாகசாலை இடையே கொசஸ்தலையாற்றை கடக்க நபார்டு மற்றும் கிராம சாலை திட்டம் வாயிலாக ரூ.19.5 கோடி மதிப்பீட்டில் 240 மீட்டர் நீளத்திற்கு 12 மீட்டர் அகலத்திற்கு மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.

இதற்காக 22.8 மீட்டர் இடைவெளியில் 10 தூண்கள் அமைக்கப்பட கட்டுமான பணிகள் துரித வேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மேம்பாலம் அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்