'பேரிடர் காலத்தில் மனிதர்களுக்குத் தேவை உடனடி உதவி! உபதேசம் அல்ல' - சு.வெங்கடேசன் எம்.பி.

தமிழக அரசு வழங்கிய நிதியை நேரடியாக மக்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தியிருக்கலாம் என்று நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.

Update: 2023-12-22 19:39 GMT

சென்னை,

டெல்லியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழை, வெள்ள பாதிப்புகள் மற்றும் நிவாரண பணிகள் குறித்து பேசிய அவர், வெள்ள நிவாரணமாக தமிழக அரசு வழங்கிய ரூ.6,000 நிதியை நேரடியாக மக்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தியிருக்கலாம் என்று தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்று குறிப்பிட்ட அவர், மாநில அளவில் சம்பந்தப்பட்ட அரசு மாநில பேரிடராக அறிவிக்க விரும்பினால் அதற்கான நடைமுறைகளுக்கு மத்திய அரசு உதவும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் நிர்மலா சீதாராமனின் கருத்து தொடர்பாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது;-

"நிவாரணத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டியது தானே என்று நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார். ரெயில் டிக்கெட் எடுத்த பயணிகளை ஶ்ரீவைகுண்டத்திலிருந்து ரெயிலிலே கூட்டிவந்திருக்க வேண்டியது தானே! ஏன் நடக்கவிட்டு கூட்டிவந்தீங்க? என்று நாங்கள் கேட்க மாட்டோம். பேரிடர் காலத்தில் மனிதர்களுக்குத் தேவை உடனடி உதவி! உபதேசம் அல்ல"

இவ்வாறு சு.வெங்கடேசன் எம்.பி. பதிவிட்டுள்ளார்.



Tags:    

மேலும் செய்திகள்