தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் பகுதியில் மினி லாரியில் கடத்திய 200 லிட்டர் டீசல் பறிமுதல்
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் பகுதியில் மினி லாரியில் கடத்திய 200 லிட்டர் டீசல் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் பகுதியில் கூடுதல்விலைக்கு விற்க மினி லாரியில் கடத்தி வரப்பட்ட 200 லிட்டர் டீசலை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 வாலிபர்களை கைது செய்த போலீசார், மேலும் ஒருவரை தேடிவருகின்றனர்.
சோதனை
தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாரத்லிங்கம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தட்டி அய்யன், ஏட்டு கந்தசுப்பிரமணியன் ஆகியோர் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் அருகே திடீர் சோதனை நடத்தினர். அப்போது, ஒரு மினிலாரியில் இருந்து லோடு ஆட்டோவுக்கு 200 லிட்டர் பேரலை உடன்குடி செட்டியாபத்து ரோடு பெருமாள்புரத்தை சேர்ந்த சிவராமபதி (வயது 36), முள்ளக்காடு நேசமணி நகரை சேர்ந்த ஜோசப் (21) ஆகியோர் மாற்றிக் கொண்டு இருந்தனர்.
2 பேர் சிக்கினர்
உடனடியாக போலீசார் அந்த பேரலை சோதனை செய்தனர். அதில் டீசல் இருந்தது. பிடிபட்ட 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக டீசலை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் சிவராமபதி, ஜோசப் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இதை தொடர்ந்து தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து டீசல் மற்றும் 2 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட டீசலின் மாதிரியை பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்த வழக்கில் தூத்துக்குடியை சேர்ந்த ரியாஸ் டேனியல் என்ற பாக்கியா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.