வரும் தேர்தலில் தே.மு.தி.க. தங்களது பலத்தை வெளிப்படுத்தும்; பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

வரும் தேர்தலில் தே.மு.தி.க. தங்களது பலத்தை வெளிப்படுத்தும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Update: 2023-03-18 18:40 GMT

வரும் தேர்தலில் தே.மு.தி.க. தங்களது பலத்தை வெளிப்படுத்தும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சாமி தரிசனம்

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த திருப்பாற்கடலில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் தே.மு.தி.க. மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இரவு சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

அதைத்தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகவும் சீர்கெட்ட நிலையில் உள்ளது. அதற்கு காரணம், வீதிக்கு 4 மதுபான கடைகள் உள்ளதும், போதைப் பொருட்களின் விற்பனை அதிகரித்து இருப்பதும் தான். இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆண்கள், பெண்கள் முதற்கொண்டு அனைவரும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலின் அடுத்த முதல்-அமைச்சர் என அமைச்சர்கள் தெரிவித்து வரும் கருத்துக்கு அக்கட்சியினர் தான் முடிவு எடுக்க வேண்டும். ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வரமாட்டார் என தெரிவித்திருந்த நிலையில் தற்போது சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் ஆக்கப்பட்டு இருக்கிறார்.

வெற்றி, தோல்வி சகஜம்

ஈரோடு இடைத்தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு வாக்கு சதவீதம் குறைந்த இருப்பதாக தெரிவிக்கும் கருத்து தவறு. வாக்காளர்களுக்கு பணத்தை வழங்கி வெற்றி பெற்றது ஒரு வெற்றியா?.

தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம். இந்த வெற்றியின் மூலம் வாக்கு சதவீதத்தை நிர்ணயிக்க முடியாது. கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரும் தேர்தலில் வெற்றி, தோல்வியை சந்தித்தவர்கள் தான். வரும் தேர்தலில் தே.மு.தி.க. தங்களது முழு பலத்தை வெளிப்படுத்தும்.

இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்