விவசாயி கொலை வழக்கில்2 பேருக்கு ஆயுள் தண்டனை:தேனி கோர்ட்டு தீர்ப்பு
சின்னமனூர் அருகே விவசாயி கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
விவசாயி கொலை
தேனி மாவட்டம் குச்சனூர் அருகே உள்ள துரைச்சாமிபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 55) விவசாயி. இவர், கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ந்தேதி அதே ஊரில் உள்ள குடிநீர்தொட்டி அருகில் தனது மகள் மலர்மணியுடன் நின்று பேசி கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த சிலர் பாண்டியனிடம் தகராறு செய்து அவரை கத்தியால் குத்தினர். பின்னர் அவரை அதே பகுதியில் இருந்த கிணற்றுக்குள் தள்ளி விட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சின்னமனூர் போலீசார் அங்கு வந்து பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதுகுறித்து மலர்மணி சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
4 பேர் கைது
அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், பாண்டியனுக்கும், அதே பகுதியை சேர்ந்த காட்டுராஜா மனைவி பாக்கியம் (63) என்பவருக்கும் இடையே நெருங்கிய பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கன்னிசேர்வைபட்டியில் வசித்த பாக்கியத்தின் மகன் மணி (41), மகள் பிரேமா (43), மருமகனான கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பழனிகாவு பகுதியை சேர்ந்த விஜயன் என்ற விஜயபாண்டி (46) ஆகியோர் பாண்டியனை கண்டித்தும் கேட்காததால் அவர்கள் கூட்டுச் சேர்ந்து கொலை செய்ததாகவும் தெரிய வந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக மணி, விஜயன், பாக்கியம், பிரேமா ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
ஆயுள் தண்டனை
இந்த வழக்கு தேனி மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி கோபிநாதன் நேற்று தீர்ப்பு கூறினார்.
இந்த வழக்கில், மணி, விஜயன் என்ற விஜயபாண்டி ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார். அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் ஒரு மாதம் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் இந்த வழக்கில் பாக்கியம், பிரேமா ஆகிய இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மணி, விஜயன் ஆகிய இருவரையும் போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.