தஞ்சையில் மல்லிகை, முல்லை பூ கிலோ ரூ.1000-க்கு விற்பனை

தஞ்சையில் மல்லிகை, முல்லை பூ கிலோ ரூ.1000-க்கு விற்பனை

Update: 2022-11-19 20:02 GMT

மழை, பனி காலம் என்பதால் பூக்கள் வரத்து குறைந்ததையடுத்து விலை உயர்ந்து காணப்பட்டது. அதன்படி தஞ்சையில் நேற்று மல்லிகை கிலோ ரூ.1,000-க்கும், முல்லை பூ ரூ.1000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தஞ்சை பூ மார்க்கெட்

தஞ்சை பூக்கார தெருவில் பூச்சந்தை உள்ளது. இங்கு பூக்கள் மொத்தமாகவும். சில்லரையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தஞ்சை மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தஞ்சை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் பூக்கள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.அதேபோல இங்கிருந்து பூக்களை வாங்கி வியாபாரிகள் வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்வார்கள். இதுதவிர வேதாரண்யம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி. பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கும் தஞ்சையிலிருந்து பூக்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும்.

விலை உயர்வு

பொதுவாக பண்டிகை காலங்களில் பூக்களின் விலை உயர்ந்து காணப்படும். குறிப்பாக ஆயுதபூஜை. பொங்கல் பண்டிகை. தீபாவளி பண்டிகை மற்றும் முகூர்த்த தினங்களில் பூக்களின் விலை உயர்ந்து காணப்படும். அதேபோல்இன்று (ஞாயிற்றுக்கிழமை) முகூர்த்த நாள் என்பதால் நேற்று பூக்கள் விலை உயர்ந்து காணப்பட்டது.

தஞ்சையில் நேற்று ரூ.50 முதல் ரூ.400 வரை பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் ரூ.600 விற்கப்பட்ட மல்லிகைப்பூ கிலோ நேற்று ரூ.1000-க்கும், ரூ.600-க்கு விற்கப்பட்ட முல்லைப்பூ ரூ.1000-த்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. ரூ.400க்கு விற்கப்பட்ட ஜாதிமல்லி ரூ.600-க்கும், ரூ.150-க்கு விற்கப்பட்ட அரளிப்பூ ரூ.200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

விற்பனை அதிகரிப்பு

இதே போல் செவ்வந்தி ரூ.140-க்கும், மருக்கொழுந்து கட்டு ரூ.40-க்கும், செண்டிப்பூ ரூ.50-க்கும், ஆப்பிள் ரோஸ் ரூ.1000-க்கும், பன்னீர் ரோஸ் ரூ.150-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

பூக்களின் விலை உயர்ந்த காணப்பட்டாலும் நேற்று மக்களும் அதிக அளவில் பூக்களை வாங்குவதற்காக திரண்டு வந்திருந்தனர். காலை முதலே பூச்சந்தை களைகட்டத் தொடங்கியது. பூ வாங்க வந்த மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டதால் பூக்காரத் தெரு சாலையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

உற்பத்தி பாதிப்பு

இது குறித்து பூ வியாபாரிகள் கூறுகையில், தற்போது மழை மற்றும் பனி காலம் என்பதால் பூக்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வரத்தும் குறைவாக உள்ளது. பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது. மேலும் நாளை (இன்று) முகூர்த்த நாள் என்பதால் பூக்கள் விலை உயர்ந்து காணப்பட்டது"என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்