ராமநாதபுரத்தில் தக்காளி கிலோ ரூ.170-க்கு விற்பனை

உழவர் சந்தையில் தக்காளி விற்பனை நிறுத்தப்பட்டது. ராமநாதபுரத்தில் தக்காளி கிலோ ரூ.170-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Update: 2023-07-30 18:45 GMT

உழவர் சந்தையில் தக்காளி விற்பனை நிறுத்தப்பட்டது. ராமநாதபுரத்தில் தக்காளி கிலோ ரூ.170-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தக்காளி விலை உயர்வு

தமிழகத்தில் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. தக்காளி ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாக மாறிவிட்டது. பெட்ரோலை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் தக்காளிக்கு மவுசு இன்னும் குறையவில்லை. பொதுமக்கள் தங்களின் உழைப்பிற்கான ஊதியத்தில் பாதி தொகையை தக்காளிக்கு செலவிடும் அவல நிலை உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏறிய விலை காரணமாக வெளிமார்க்கெட்டில் தக்காளி விலை கிலோ ரூ.140 என விற்பனை செய்யப்பட்டு வந்தது. தக்காளி விலையின் தாக்கத்தை குறைக்கும் வகையில் தமிழக அரசு தோட்டக்கலைத்துறை மூலம் உழவர் சந்தையில் தக்காளி மலிவு விலையில் விற்பனை செய்யப்படும் என அறிவித்தது.

இதன்படி மாவட்டத்தில் உழவர் சந்தையில் தக்காளி விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் தோட்டக்கலைத்துறை மூலம் நடவடிக்கை எடுத்து கடந்த 10-ந் தேதி முதல் விற்பனை செய்யப்பட்டது. விவசாயிகளிடம் வாங்கி வந்து கிலோ ரூ.95 முதல் 100 வரை விற்பனை செய்யப்பட்டது. அரசின் இந்த நடவடிக்கை காரணமாக தக்காளி விலை சற்று சரிய தொடங்கியது. கிலோ ரூ.120 வரையும் சில இடங்களில் ரூ.100 வரையும் விற்பனை செய்யப்பட்டது.

ரூ.170-க்கு விற்பனை

இந்நிலையில் அதிக மழை, தேவை காரணமாக தக்காளி விலை மீண்டும் உயரத்தொடங்கி உள்ளது. குறிப்பாக தென் மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக தக்காளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்காரணமாக வரத்து குறைந்துள்ளதால் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் ராமநாதபுரத்தில் இதுவரை இல்லாத வகையில் நேற்று தக்காளி விலை உச்சத்தை தொட்டது. ஒரு கிலோ ரூ.170 என விற்பனையானது. அதிக விலைக்கு விற்பனையானபோதிலும் மக்கள் வேறு வழியின்றி 100, 200, ¼ கிலோ என வாங்கி சென்றனர்.

அரசின் உத்தரவின்படி ராமநாதபுரத்தில் உழவர் சந்தையில் கடந்த பல நாட்களாக தக்காளி விற்பனை செய்யப்படவில்லை என்றும், உடனடியாக மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு அரசே தக்காளி விற்பனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசே விற்க வேண்டும்

ராமநாதபுரம் உழவர் சந்தையில் அரசின் சார்பில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று நம்பி காலையில் தினமும் ஏராளமானோர் வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற வண்ணம் உள்ளனர். இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரி நாகராஜன் கூறியதாவது:- அரசின் உத்தரவின்படி மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தோம். கடந்த 10-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை வெளிமாவட்டங்களுக்கு சென்று தக்காளி கொள்முதல் செய்து விற்பனை செய்தோம். மேற்கண்ட நாட்களில் மொத்தம் ஆயிரத்து 25 கிலோ தக்காளி விற்பனை செய்தோம். அதன்பின்னர் தக்காளி கிடைக்கவில்லை.

ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் பகுதியிலும் தக்காளி கிடைக்கவில்லை. வெளிமார்க்கெட்டில் வாங்கி விற்பனை செய்ய முடியாது. ஓசூர், கிருஷ்ணகிரி பகுதிகளில் அதிக மழை காரணமாகவும், கடைசி பருவம் என்பதாலும் தக்காளி வரத்து நின்றுவிட்டது. புதிதாக வளர்ந்துள்ள தக்காளி செடியில் இன்னும் 15 நாட்களில் தக்காளி விளையத்தொடங்கிவிடும். அதன்பின்னர் விலை குறையும். இவ்வாறு கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்